“ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது” – டெல்லி கண்டன பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்கிறார் எனவும், ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில்…

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்கிறார் எனவும், ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசினார்.

‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளன. மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகள், மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் புதிய நெருக்கடிகளை சந்திப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா, விசிக தலைவர் திருமாவளவன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பிற இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது,

“ஒரு சில கோடீஸ்வரர்களின் உதவியுடன் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்து வருகிறார். ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது. பாஜகவால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது. காங்கிரஸின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை வைத்து நாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் வாக்குகளுக்காக நடத்தப்படும் தேர்தல் அல்ல, அரசியல் சாசனம், ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம். மக்கள் நியாயமாக வாக்குகளை அளிக்கவில்லை என்றால், மேட்ச் பிக்சர் வெற்றி பெறுவார்.

எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை. தேர்தலுக்கு முன்பு இரண்டு முதலமைச்சர்களை சிறைக்கு அனுப்பியுள்ளார்கள். எங்கள் கணக்குகள் அனைத்தையும் முடக்கி வைத்துவிட்டார்கள். தேர்தலுக்கு முன்பே இதை ஏன் செய்தீர்கள்? உங்களால் இதனை 6 மாதங்களுக்கு முன்போ அல்லது பின்போ செய்திருக்க முடியும் அல்லவா?” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.