சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. எதற்காக இந்த கணக்கெடுப்பு,…

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. எதற்காக இந்த கணக்கெடுப்பு, இதன் முக்கியத்துவம் என்ன? மத்திய அரசுக்கு நெருக்கடியா?  என்பது பற்றி பார்ப்போம்…

90 ஆண்டுக்கு முன் நடந்த கணக்கெடுப்பு

இந்தியாவில் 1931ஆம் ஆண்டு தான் சாதிரீதியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் விழுக்காடு 52 ஆக இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு மத்திய அரசு 7 முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி உள்ளது.  அதன் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2011ம் ஆண்டு சமூக- பொருளாதார மற்றும் சாரிவாரி கணக்கெடுப்பாக 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பீகார் அரசு தீவிரம்

மற்ற மாநிலங்கள் யோசனையில் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கோரிக்கையை பீகார் மாநில அரசோ நீண்ட பரிசீலனைக்கு பின்னர் அதனை மேற்கொள்ளத் தொடங்கி விட்டது. பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் 2018 மற்றும் 2019ல் சாதிவாரி கணக்கெடுபபு கோரி இரண்டு முறை சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சாரிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.

அதன் தொடர் நடவடிக்கையாக இன்று பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்ஙகியது. 500 கோடி ரூபாய் செலவில் இரண்டு கட்டமாக இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. முதல் கட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள குடும்பங்கள் குறித்த ஒட்டுமொத்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பை இந்த ஜனவரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு கட்ட கணக்கெடுப்பு

இரண்டாவது கட்ட கணக்கெடுப்பு மார்ச்சில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கணக்கெடுப்பின் போது, ஒவ்வொரு வீடு தோறும், குடும்பம் தோறும் சென்று மக்கள் தொகை, சாதிகள், உட்சாதிகள், மதங்கள் மற்றும் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் மொபைல் ஆப் மூலமாக கிராம பஞ்சாயத்துகள் தொடங்கி மாவட்ட அளவில் நடைபெற உள்ளது. சாதி மட்டுமின்றி, வாழும் இடம், குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள், அவர்களுடைய தொழில், ஆண்டு வருமானம் குறித்த விவரம் சேகரிக்கப்பட உள்ளது. இந்த பணிகளில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

2024 தேர்தலுக்காகவா?

2024 தேர்தலுக்கு முன்னதாக இந்த சாரிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க பீகார் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த சாதிகளுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி அவர்களுடைய வாக்குகளை அள்ளலாம் என்று ஆளும் நிதிஷ் குமார் கூட்டணி அரசின் எண்ணமாக இருக்கிறது. தேர்தலில் பதற்றத்தை அதிகரிக்கக் கூடியதாக பார்க்கப்படும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பீகார் மாநிலத்தில் மண்டல் கமிஷன் போன்ற அரசியலை முன்னெடுக்குமா அல்லது ரத யாத்திரை போன்ற கமண்டல அரசியலுக்கு வழிகோலுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சாரிவாரி கணக்கெடுப்பு ஏன்?

பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தவறின்றி இருக்க வேண்டும் என அரசு விரும்புவதாகக் கூறினார். கணக்கெடுப்பின்போது சாதிகள் குறித்து மட்டுமே கணக்கெடுக்கப்படும் என்றும் துணை சாதிகள் பற்றி கோரப்படாது என்றும் குறிப்பிட்டார். இந்த கணக்கெடுப்பு சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்றும் நிதிஷ்குமார் கூறினார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பின் நோக்கம்

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அவர்களுடைய பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்று சில அமைப்புகளும், கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. அப்படி மாநில அரசுகள் வழங்குவதாக இருந்தால் உறுதியான தரவுகள் கட்டாயம் மாநில அரசிடம் இருக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் வன்னியர்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கையும் கூட உரிய தரவுகள் அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தில் கோரிக்கை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்டன. இந்த உள் ஒதுக்கீட்டை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கும் பிற கட்சிகளும், அமைப்புகளும் கூட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை இடஒதுக்கீட்டில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கர்நாடகாவைத் தொடர்ந்து, பீகாரும் சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொண்டிப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் முறையீடு

மாநிலவாரியாக இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பு, அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படைத் தன்மை என்ன என்று உச்சநீதிமன்றம் இருபதாண்டுகளாக கேள்வி எழுப்பி வருகிறது. மத்திய அரசு அடுத்து எடுக்க இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, இதர பிற்படுத்தப்பட்டவர்களின் மக்கள் தொகையைக் கண்டறியும் வகையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், மத்திய அரசின் விளக்கத்தை கோரி, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு  வழக்கை ஒத்திவைத்தது.

மத்திய அரசா? மாநில அரசா?

இந்தியாவில் 1931ஆம் ஆண்டுக்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2011ல் எடுக்கப்பட்ட சமூக பொருளாதார ரீதியிலான கணக்கெடுப்பும் வெளியிடப்படவில்லை. ஒவ்வொரு மாநிலமும், அந்த அந்த மாநிலத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு வரம்பை வைத்திருப்பதால், அந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் உரிய தரவுகள் அவசியமாகிறது. இந்த சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு முன்னெடுக்குமா? அல்லது கர்நாடகா, பீகாரைப் போல மற்ற மாநிலங்களும் தேவைக்கு ஏற்ப தங்கள் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க அவர்களாகவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக்கொள்ள நேரிடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
– ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.