அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கார் பந்தய சாம்பியன் கிரெக் பிபிள் (55). இவர் தனது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்துள்ளார். இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது மகன் ஜாக், கிரெக் வாட்ஸ்வொர்த் ஆகியோரும் இருந்துள்ளனர்.
இதனிடையே ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கிப் புறப்பட்ட விமானம் சுமார் 2,000 அடி உயரத்த்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பியது.
இந்த நிலையில் விமானம் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ரன்வேயைத் தாண்டிச் சென்று ஆண்டனா மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







