தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் இன்று (07.01.23) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக , தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பணி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
09, 10, 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையை பொருத்தவரை,
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் சென்டிமீட்டரில் மழை அளவு ஏதும் பதிவாகவில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு, கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.








