காவிரியில் கூடுதல் நீரை, கர்நாடகா மாநிலம் எடுப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரத்தில், கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நீடித்து வருகிறது. காவிரியின் குறுக்கே, மேகதாது என்னும் இடத்தில், சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த மேகதாது அணை பிரச்னை குறித்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரி நதியிலிருந்து நீரை எடுக்க தடைவிதிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக அரசின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் உச்சநீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு மீறுவதாகவும் தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.