“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(07.12.2023) காலை சென்னை…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(07.12.2023) காலை சென்னை வந்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் அவரை வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்ஜம் புயல் பாதிப்புகளை ராணுவ ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் சென்றார்.

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.  தமிழகத்தில் புயல் பாதிப்பு,  எடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

இதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

இந்த பெருவெள்ளத்தில் இருந்து மீண்டு சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.  இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள்,  அரசு அலுவலர்கள்,  தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த பெருமழையிலும் உயிரிழப்புகளும்,  பொருட்சேதமும் குறைக்கப்பட்டுள்ளது.  சாலைகள்,  பாலங்கள், கட்டடங்கள் போன்ற பொது கட்டமைப்புகளை சீர்செய்வதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ரூ. 5,060 கோடி வழங்கிடுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 450 கோடி வழங்கிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் மத்திய அமைச்சரிடம் அளித்துள்ளேன்.  மத்திய அரசின் குழு ஒன்று தமிழ்நாட்டுக்கு வரவுள்ளது. தமிழக அரசுக்கு உரிய நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்திருக்கிறார். விரைவில் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்’

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.