தமிழ்நாடு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமைத் தொகையை யாருக்கு வழங்கலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
2023-24ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதியன்று, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிடப்பட்டிருந்த இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. அதே சமயம் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் யாருக்கெல்லாம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றே கூறலாம். தமிழ்நாடு அரசுக்கு 7 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்து வரும் நிலையில், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்குவது மேலும் நிதிச்சுமையை அதிகரிக்கும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் பெண்கள், ஆண்டு வருமானம் அதிகமுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கான அவசியம் எழவில்லை என்றே கூறலாம்.
போதிய வருமானம் இன்றி கஷ்டத்தில் உள்ள ஏழை எளியோர், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, கணவரை இழந்த ஏழை பெண்கள், கூலித்தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள், தூய்மைப் பணியாளர்கள், விவசாய பணிக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள், சுயதொழில் மூலம் குறைந்த வருவாய் ஈட்டும் பெண்கள், ஆண்டு வருமானம் மிகவும் குறைவாக உள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உரிமைத்தொகை வழங்கினால் இத்திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவுபெறும்.
இதனையும் படியுங்கள்: ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டம்! பாராட்டு தெரிவித்த குடும்பத் தலைவிகள்!!
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சாவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. குறிப்பாக, பயனாளிகளை கண்டறிவதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
ஏனென்றால், அரசியல் கட்சியினர், இடைத்தரகர்களின் தலையீடு இருக்க வாய்ப்புள்ளது. போதிய வருமானம் உள்ளவர்களையும் இத்திட்டத்தில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் சேருவதற்கான ஆவணங்களை வழங்குவதில், ஏழை எளியோருக்கு சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் ஆவணங்களை எளிதாக வழங்கவும், மற்றவர்களின் தலையீடு இல்லாத வகையிலும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பயனாளிகள் அலைக்கழிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதை கவனத்தில் கொண்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம்.
சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனமுடன் செயல்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையெனில் அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். மாதந்தோறும் லட்சக்கணக்கான பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டியுள்ளதால், குளறுபடிகள் நிகழாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற பெண்கள் அதிருப்திக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. எனவே, அரசின் நிதிநிலைமை மேம்படும் பட்சத்தில், படிப்படியாக பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்தால் இத்திட்டம் அடுத்த கட்டத்துக்கு செல்லும்.
கஷ்டப்படும் பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைத்தால் சந்தோஷப்படும் மனநிலையை, உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் வளர்த்துக்கொண்டால், இத்திட்டத்தின் நோக்கம் முழுமைபெறும். போதிய வருமானம் இன்றி கஷ்டப்படும் பெண்களுக்கு தானே உரிமைத்தொகை கிடைக்கிறது என்ற சமூக கண்ணோட்டத்தோடு இதை அணுகினால், எந்தவொரு ஏமாற்றமும் ஏற்படாது.
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசு பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டங்களை தொடர்ந்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை எவ்வித குளறுபடியும் இன்றி தகுதிவாய்ந்த பெண்களுக்கு கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாதம் ஆயிரம் ரூபாய் என்பது சிறுதொகையாக இருந்தாலும், போதிய வருமானம் இன்றி குடும்பம் நடத்தும் பெண்களுக்கு இந்த தொகை பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.







