பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டமான பெண்களுக்கான உரிமைத் தொகை வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளதற்கு பெண்கள் பெரும் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், 2023-24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
முக்கியமாக, கடந்த சட்டப் பேரவை தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய இடத்தை பிடித்திருந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடையே மட்டுமின்றி, குடும்பத் தலைவிகளும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அண்மையில் ஈரோட்டில் நடந்து இடைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாகும்’ என அறிவித்தார். ஈரோட்டில் பிப்ரவரி 25-ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்க மாட்டோம் கண்டிப்பாக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதன்படி, இன்றைய பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அவர் அறிவித்தார். மேலும், இத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இந்த நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இந்த அறிவிப்பிற்கு குடும்ப தலைவிகள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த ஆயிரம் ரூபாயால் தங்கள் வாழ்க்கையின் பங்களிப்பு அதிகமாகும் எனவும், யாரையும் நம்பி இல்லாமல் தங்களை தாங்களே பார்த்துக் கொள்வதற்கு ஒரு உந்துதலாக இந்த தொகை இருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளதோடு, தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வயதான பெண்களுக்கு மருத்துவ உதவிக்காக, சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, தன் பிள்ளைகள் அவசர தேவைக்கு, படிப்பிற்காக கேட்கும் பணம் கேட்கும் பொழுது, எங்களது கையில் இருந்து கொடுப்பதற்கு பேருதவியாக இருக்கும் என்றும், பெண்களுக்காக இதுபோன்ற திட்டங்களை யோசித்து அதை செயல்படுத்திடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களுடைய மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வதாக வேலைக்குச் செல்லும் பெண்களும், வீட்டில் இருக்கும் பெண்களும் என அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா