வரும் 2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பின்னர் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது பட்ஜெட்டான இதில், மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு உள்பட ஏராளமான நலத்திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள 100 முக்கிய அறிவிப்புகளை பார்ப்போம்.
1.அதிமுக ஆட்சியில் 62,000 கோடி ரூபாயாக இருந்த வருவாய்ப்பற்றாக்குறை, நடப்பு ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் 30,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
2. நிதி நெருக்கடிக்கு காரணமாக இருந்த வரிவருவாய் வீழ்ச்சி கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் சரிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் விகிதம் கடந்த 2006-2011ம் ஆண்டு கால திமுக ஆட்சியில் சராசரியாக 8 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 5.58 சதவீதமாக குறைந்தது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த விகிதம் 6.11 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
3. மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜன் ஆகியோர் தாய் மொழியை காக்க வழங்கிய பங்களிப்பை போற்றும் வகையில் சென்னையில் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும்.
4. அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை பரப்புவதற்காக அவரது படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும். இதற்காக அரசால் 5 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
5. தொழில்நுட்பத்துறையில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.
6. சங்கமம் கலை விழா வரும் ஆண்டில் மேலும் 8 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
7.மாநிலம் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
8. உலகை ஆண்ட சோழர்களை போற்றும் வகையில் தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
9. இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் ஏற்கனவே 3,510 வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், இரண்டாம் கட்டமாக 3,959 வீடுகள் கட்டுவதற்கு 223 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
10. நாட்டை காக்க உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் கருணைத் தொகை 20 லட்ச ரூபாயிலிருந்து 40 லட்ச ரூபாயாக அதிகரிப்பு.
11.வீரதீரச் செயலுக்கான உயர் விருதுகளைப் பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு படையினருக்கு தற்போது வழங்கப்படும் பரிசுத் தொகை 4 மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
12. தொழிற்சாலைகளிலும், கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புச் சாரா தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தொற்றா நோயால் பாதிக்கப்படுவதை தடுக்க முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளில் உள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
13. 2023-2024ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மருத்துவத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
14 பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகளை கட்டுவதற்கு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
15. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம், 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
16. அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்திட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்துசமயம் மற்றும் அறநிலையங்கள் நலத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். இந்த பள்ளிகளில் தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அனைத்துப் பணி பயன்களும் பாதுகாக்கப்படும்.
17. பள்ளிக் கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் 40,299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
18. மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரும் ஜூன் மாதம் வாசகர்களின் பயன்பாட்டிற்கு வரும்.
19. 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், 2,783 கோடி ரூபாய் செலவில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்தப்படும்.
20. 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் ”தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்” அமைக்கப்படும்.
21. இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் என்கிற இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டில் 25 கோடி ரூபாய் வழங்கப்படும்.
22. சூளகிரி சிப்காட் தொழிற்பூங்காவில், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.
23. ஒன்றிய குடிமை பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டு தேர்வு மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு தயாராவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் 10 மாதத்திற்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
24. உயர்கல்வித்துறைக்கு 2023-24ம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் மொத்தம் 6,967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
25. சென்னையில் ஓர் உலகலாவிய அதிநவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
26. சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை நவீன விளையாட்டு வசதிகளுடன் சீரமைக்க பட்ஜெட்டில் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
27. மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, நீலகிரியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக 4 விடுதிகள் நவீன வசதிகளுடன் 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
28. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம் வரும் நிதியாண்டிலிருந்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்கிற திட்டம் செயல்படுத்தப்படும்.
29. நகர்ப்புற பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம் நடைமுறைபடுத்தப்படும். வரும் 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
30. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 2023-24ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் 3,513 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
31. மாற்றுதிறனாளிகளுக்கான உரிமைத் திட்டம் 2023-2024ம் நிதியாண்டில் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
32. மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக அதிகரிப்பு. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக அதிகரிப்பு.
33. வரவு செலவு திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு 1,580 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
34. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். அரசு அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
35. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வரும் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்.
36. பெண்களுக்கென சிறப்பு ”புத்தொழில் இயக்கம்” ஒன்றை தமிழ்நாடு அரசு தொடங்கும். பெண் தொழில்முனைவோர் புத்தொழில்களை தொடங்குவதற்கு அனைத்து வகையிலும் இந்த இயக்கம் உதவும்.
37. பொது விநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்கென தமிழ்நாடு பட்ஜெட்டில் 10,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு. கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு 16, 262 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
38.நீர்நிலைகளை மீட்டெடுத்து புத்துயிர் அளிக்க, தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் 462 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 341 ஏரிகள், 67 அணைக்கட்டுகள், 11 கால்வாய்களை புனரமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
39. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் மாவட்டங்களில் 184 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நீண்ட கால வெள்ள தணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒன்பது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
40. வரும் காலங்களில் வெள்ளம், கனமழையை எதிர்கொள்ளும் கட்டமைப்பை வலுப்படுத்த 320 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்
41. விலங்குகள் நலவாரியத்தை வலுப்படுத்த நிதிநிலை அறிக்கையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு.
42. மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணம், மீன் பிடி தடை கால நிவாரணம், மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டங்கள் என 4.3 லட்சம் மீனவர்கள் பயன்பெறும் வகையில், 389 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
43. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட, பாக் வளைகுடா பகுதியில் 3 மாவட்டங்களின் கடற்பகுதியில் 217 செயற்கை பவளப் பாறை அலகுகள் ரூ.79 கோடியிலும், பாக் வளைகுடா தவிர ஏனைய மாவட்ட கடற்பகுதிகளில் 200 செயற்கை பவளப் பாறை அலகுகள் ரூ.64 கோடியிலும் ஒன்றிய, மாநில நிதியுதவியுடன் அமைக்கப்படும்.
44. கடல்மாசுபாட்டை தடுக்கவும், கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்கிற திட்டத்தை 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தப்பட உள்ளது.
45. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம் வட்டங்களில் 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் தந்தை பெரியார் வன விலங்கு சரணாலயம் அமைக்கப்படும் . இது மாநிலத்தின் 18 வது வனவிலங்கு சரணாலயமாகும்.
46. மரக்காணத்தில் ரூ.25 கோடி செலவில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்
47. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கி.மீ சாலைகளின் தரத்தை மேம்படுத்தி, ஊரக பகுதிகளில் சிறப்பான சாலை வசதிகளையும், பொருளாதார மேம்பாட்டினையும் உறுதி செய்திட, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தினை அரசு இந்த ஆண்டு தொடங்கும்.
48. முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கிழ் முக்கியமான இணைப்புச் சாலைகள், பேருந்து இயங்கும் சாலைகள் தரம் உயர்த்தப்படும். வரும் நிதியாண்டில் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,145 கி.மீ சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
49.அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் சிறிய நீர் நிலைகள், குளங்கள், ஊரணிகள், 800 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
50. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 2023-2024 நிதியாண்டில் 35 கோடி வேலை நாட்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
51. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறைக்கு பட்ஜெட்டில் 22,562 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
52.ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் 2ம் கட்ட பணிகளை, 7,145 கோடி ரூபாயில் செயல்படுத்த, பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவிக்காக முன்மொழியப்படும். வரும் நிதியாண்டில் உயிர் நீர் இயக்கத்தை செயல்படுத்த 6,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
53. கோவையில் உலகதரம் வாய்ந்த செம்மொழிப்பூங்காவை இரண்டு கட்டங்களாக 172 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
54. வட சென்னையில் அடிப்படை வசதி கட்டமைப்புகளை மேம்படுத்த வடசென்னை வளர்ச்சி திட்டம் எனும் திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
55. சென்னை தீவு திடலில் இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை 50 கோடி ரூபாய் செலவில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்.
56. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள மறுகுடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் விளையாட்டு பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும்.
57. வரும் நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 1424 கி.மீ மண்சாலைகள் மொத்தம் 1,211 கோடி ரூபாய் செலவில் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும்.
58. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 1,407 கோடி ரூபாய் செலவில், 148 கி.மீ சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்தும் பணிகளும், 524 கி.மீ சாலைகளை 803 கோடி ரூபாய் மதிப்பில் இருவழிச்சாலைகளாக அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
59. இந்த பட்ஜெட்டில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 19,465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
60. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை 4 வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படும்
61. சிங்காரச் சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அடையாறு , கூவம் நீர்நிலைகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைத்து, ஆற்றங்கரையை அழகுபடுத்தும் திட்டம் அரசு-தனியார் பங்களிப்புடன் ரூ.1500 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
62. கோவை, மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சி மேற்கொள்ள அனைத்து மக்கள் பங்களிப்புடன் எழில் மிகு கோவை, மாமதுரை எனும் தலைப்பில் ஒருங்கிணைந்த திட்டம் தயாரிக்கப்படும்.
63. மலைப்பகுதிகள் உள்ளிட்ட மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய 50 வட்டாரங்கள் கண்டறியப்பட்டு ஒவ்வொன்றிலும் தலா 5 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
64. 1000 புதிய பேருந்துகள் கொள்முதல், 500 பேருந்துகளை புதுப்பிக்க 500 கோடி ஒதுக்கீடு
65. மகளிருக்கான இலவச பேருந்து பயணத்திற்காக 2023-24ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் 2800 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
66. போக்குவரத்து துறைக்கு இந்த பட்ஜெட்டில் மொத்தம் 8,056 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
67. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பட்ஜெட்டில் 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
68. கோவையில் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். அவினாசி சாலை, சத்தியமங்களம் சாலைகளை உள்ளடக்கி 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்
69. மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். திருமங்கலத்தையும், ஒத்தக்கடையையும் இணைக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும்.
70. 2030ம் ஆண்டுக்குள் 77,000 கோடி ரூபாய் செலவில், 14,500 மெகாவாட் திறன் கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அரசு-தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
71. மின் கட்டணம் செலுத்தும் அனைத்து நுகர்வோர்களும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும்
72. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அரசு வழங்கும் மானியத்திற்பாக பட்ஜெட்டில் 14,063 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.
73. சேலத்தில் 880 கோடி செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்
74. 20 கோடி செலவில் 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் உருவாக்கப்படும்
75. கைத்தறி மற்றும் துணி நூல் துறையில், மதிப்பு தொடரின் முழுமையான வளர்ச்சி, நவீன வடிவமைப்பு, துணி நூல் தயாரிப்பு இயந்திர உற்பத்தியை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் புதிய துணி நூல்கொள்கை ஒன்று வெளியிடப்படும்.
76.காலநிலை தொழிநுட்பம், ஊரக தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், ஆகிய துறையில் நிபுணத்துவம் பெற விழையும் தொழில் வளர் காப்பகங்களை ஆதரிக்கும் நோக்கில், உயர்நுட்ப மையங்களை அமைக்க புத்தொழில் தமிழ்நாடு இயக்கம் உதவும்.
77. இவ்வாண்டு முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில்மேம்பாட்டு திட்டத்தில் 114 கோடி ரூபாய் அளவிலான மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டச் செயல்பாட்டில் இது ஒரு புதிய மைல்கல்.
78. சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கும் பட்ஜெட்டில் 1,509 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
79. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை தமிழ்நாட்டிற்கு தொழில்முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 2,70,020 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு பெறப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
80. அடுத்த ஆண்டு ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு.
81.தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்படுவதை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை. இத்தகைய இரண்டு புதிய தொழிற்சாலைகள் ராணிப்பேட்டையிலும், கள்ளக்குறிச்சியிலும் அமைய உள்ளன. இதன் மூலம் 32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
82. விருதுநகர்,சேலம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் ரூ. 410 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 22,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
83.நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1500 பணியாளர்கள் தங்கும் வசதிகளுடன் தொழிலாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்.
84. 2023-2024ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தொழில்துறைக்கு 3,268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
85. சென்னை, கோயமுத்தூர், ஓசூரில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்கள் அமைக்கப்படும்.
86. சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம், மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும்.
87. ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில், தலா ஒரு லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
88. சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சுற்றுலா தலங்களில் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நடப்பாண்டில் 75 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
89. பிச்சாவரம், பூம்புகார், ஒகேனக்கல் ஆகிய சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி வழக்கப்பட்டுள்ளது.
90. தேவாலயங்களை பழுதுபார்க்கவும், புதுப்பிக்கவும் வழங்கப்படும் மானியம் ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.
91. வஃபு உடமைகளை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக வஃபு வாரிய சொத்துக்களின் தரவு தளம் உருவாக்கப்படும்.
92. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், 4,236 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
93. வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.
94. அரசின் திட்டங்களையும் சேவைகளையும், கடைக்கோடி மக்களும் பெற்றும் பயனடையும் வகையில், அனைத்து ஊராட்சிகளிலும், நகர்ப்புற பகுதிகளிலும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
95. சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக பட்ஜெட்டில் 5,346 கோடி ரூபாய் ஒதுக்கீடு
96. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மொத்தம் 38.25 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்படும்
97. வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான பாதுகாப்பான பணிச்சூழலை எடுத்துரைத்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அனைத்து முயற்சிகளையும் பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசுகளுடன் இணைந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
98. அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம் 40 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாக வரும் நிதியாண்டிலிருந்து உயர்த்தப்படும்.
99.நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக் கட்டணம் 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைப்பு
100. இத்தனை அறிவிப்புகளுக்கும் ஹைலைட்டாக ஒரு முக்கிய அறிவிப்பு 2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மகளிர் உரிமைத் தொகை பற்றிய அறிவிப்புதான் அது. மகளிரிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் இந்த திட்டம், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ந்தேதி மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தமது பட்ஜெட் உரையில் கூறினார். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்திற்காக பட்ஜெட்டில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







