ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு தடையா? மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணம் தற்போது டெல்லியை அடைந்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், திட்டமிட்டபடி நடைபயணம் நிறைவு பெறுமா ? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரை என்கிற இந்திய…

கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணம் தற்போது டெல்லியை அடைந்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், திட்டமிட்டபடி நடைபயணம் நிறைவு பெறுமா ? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை என்கிற இந்திய ஒற்றுமைப் பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில்
தொடங்கினார். தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களை கடந்து தலைநகர் டெல்லியைச் சேர்ந்துள்ளது இந்த பயணம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த நடைபயணத்தில் அங்காங்கே அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசுத்துறை முன்னாள் அலுவலர்கள், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்கள் பலர்பங்கேற்று, ஆதரவளித்தும் வருகின்றனர்.    தமிழ்நாட்டில இருந்து மதிமுக தலைமைக் கழக செயலாளர் து ரை வைகே, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, உள்ளிட்டோரைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வரிசையில் வருகிறார்கள். ராகுல் நடைப் பயணத்திற்கு அனைத்து இடங்களிலும் பொது மக்கள் அமோக ஆதரவளித்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக சொல்கின்றனர். குறிப்பாக, பாரதிய ஜனதாக் கட்சி வகுப்புவாதத்தை வளர்த்து, வெறுப்பை விதைத்து, மக்களை பிளவுபடுத்தி வருகிறது. ஆகையால்தான் இந்திய ஒற்றுமைக்கான இந்த பயணம் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

நடைபயணத்தில், பாரதிய ஜனதா கட்சியையும் மத்திய அரசையும் ராகுல் காந்தியும் கடுமையாக விமர்சித்தும் வருகிறார். அண்மையில், ராஜஸ்தானில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவினர் இந்திதான் கற்க வேண்டும் என்கின்றனர். ஆனால் ஆங்கிலம் கற்றால்தான் முன்னேற முடியும். வெளியுலகத்தை தொடர்பு கொள்ள முடியும். இந்த வாய்ப்பு ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க விடாமல், தடுக்கிறார்கள். அதேநேரத்தில், பா.ஜ.கவினரின் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்று பேசியது உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம்.

இந்நிலையில், சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்கிற எச்சரிக்கையை அடுத்து, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் மீண்டும் கவனம் செலுத்தி வருகின்றன. இதன்படி, மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பு வழிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை சொல்லியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், காங்கிரஸ் தலைவர்களுக்கும் ராகுல் காந்திக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், நடை பயணத்தில் முகக் கவசம் அணிந்து, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அப்படி இல்லை எனில், பொது நலன் கருதி, நடை பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்த திட்டமிட்டிருந்த நடை பயணத்தையும் ஒத்தி வைத்துள்ளனர்.

ஆனால், ராகுல்காந்தியின் நடை பயணத்திற்கு பெருகும் மக்கள் ஆதரவைப் பார்த்து, இந்த நடை பயணத்த நிறுத்த சதி செய்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபயணம் செல்லும் போது மின் இணைப்பைத் துண்டிக்கிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டினார்.

பாஜகவின் முன்னாள் நண்பரும் தற்போதைய எதிரியுமான, மகாராஷ்ட்ரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவும் நடைபயணத்தை நிறுத்த முயற்சிப்பது போல் தெரிகிறது என்றார். இந்த நடைபயணத்தின் நாயகன் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம், நடைபயணத்தை நிறுத்த எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காததால், கொரோனாவைக் காரணம் காட்டி, நிறுத்தப் பார்க்கிறார்கள். காங்கிரஸின் வலிமை, உண்மையைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று சொல்லி விட்டு, பயணத்தை தொடர்கிறார்.

கொரோனா பரவலைத் தடுக்க அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று சொல்வது எங்க கடமை. இதில் எந்த அரசியல் நோக்கமுல் இல்லை என்கிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா.

இந்நிலையில், திட்டமிட்டபடி 150 நாட்களுக்கு நடைபயணம் நடக்குமா? பாதுகாப்புக் காரணங்களால் இடையில் நிறுத்தப்படுமா…? அடுத்தடுத்த நாட்களில் தெரியும்….

இதன் வீடியோ செய்தி – https://www.youtube.com/watch?v=npaFJzNW5O0

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.