போர் என்ற தலைப்பின் கீழ் 2025 ஆம் ஆண்டானது மற்ற ஆண்டுகளுக்கு எந்த விதத்திலும் சளைக்காத ஆண்டாகவே அமைந்துள்ளது. அவற்றில் சில,
1. உக்ரைன் – ரஷ்யா போர்
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போரை தொடங்கியது. சுமார் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போரால் இதுவரை, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளர். மேலும் ஆயிரக்காணோர் இடப்பெயர்தலுக்கு உள்ளாகியுள்ளனர். போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இரு நாட்டு தலைவரகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதன் ஒரு பகுதியாக 28 அம்ச திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்தார். இதற்கு ரஷ்யா சம்மதித்த போதிலும் பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி உக்ரைன் சம்மதிக்க தயக்கம் காட்டியது. தொடர்ந்த இத்திட்டத்தில் டிரம்ப் சில மாற்றங்களை செய்துள்ளார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி புளோரிடாவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை டிரம்ப் சந்தித்துப் பேசினார். புதின் மற்றும் ஜெலன்ஸ்கி ஆகியோர் அமைதி திட்டத்தின் கையெழுத்திட்டு போர் முடிவுக்கு வரும் என்று சர்வதேச சமுதாயம் எதிர்ப்பார்க்கிறது.
2. இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல் தொடுத்து பலரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இப்போரில் காசாவை சேர்ந்த 70,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இஸ்ரேலின் தொடர் முற்றுகை காரணமாக காசாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் சர்வதேச அளவில் போர் நிறுத்தம் கோரி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு அழுத்தம் எழுந்தது. தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 20 அம்சத் திட்டத்தின் வாயிலாக அக்டோபர் 10 இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் பணயக் கைதிகளை விடுவித்தனர்.
3 . சூடான் உள்நாட்டு போர்
சூடான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு 2021 ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. SAF (ராணுவம்) மற்றும் RSF (துணை ராணுவம்) இடையே அதிகாரப் போட்டி அதிகரித்தது. இதனால் இரு தரப்பினருக்குமான மோதல் அதிகரித்து கடந்த 2023ஆம் ஆண்டு உள்நாட்டு போராக வெடித்தது. 2025 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வரும் இப்போரால் இதுவரை 150,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஏராளமான மக்கள் சூடானுக்கு உள்ளேயும், அதன் எல்லைகளுக்கு வெளியேயும் இடம்பெயர்ந்துள்ளனர். அது மட்டுமின்றி நாட்டின் சில பகுதிகளில் பஞ்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி துணை ராணுவப் படைகள் மத்திய சூடானில் முக்கிய எண்ணெய் வயல்களைக் கைப்பற்றி, மேற்கு நகரங்களில் இருந்து SAF-ஐ பின்வாங்கச் செய்து, முன்னேற்றம் கண்டு வருகின்றன.
4. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம்
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7, 2025 அன்று இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த சுமார் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய விமானப்படை மற்றும் இராணுவம் ஆகியவை ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தின. மேலும் பாகிஸ்தானின் ஏராளமான ட்ரோன்களை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின.
இராணுவத் தாக்குதலுடன் மட்டும் நிறுத்தாமல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, தூதரக உறவுகள் துண்டிப்பு, சிம்லா ஒப்பந்தம் நிறுத்தம் என் ராஜதந்தர நடவடைக்கைகளிலும் இந்தியா இறங்கியது. நிலைமை மோசமடைவதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின் படி போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறினார். ஆனால் அவரது பேச்சை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
5 . காங்கோ – எம்23 அமைதி ஒப்பந்தம்
ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக ஏராளமான கிளர்ச்சி குழுக்கள் இயங்கி வருகிறது. அவற்றில் பெரிய அமைப்பான எம் 23 ஆனது நீண்ட கலாமாக காங்கோ அரசுடன் போரிட்டு வருகிறது. ருவாண்டா ஆதரவில் இயங்குவதாக கூறப்படும் எம்23 குழுவானது இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை நடத்தியது. ஜனவரி 27, 2025 அன்று வட கிவு மாகாணத்தின் தலைநகரான கோமா மற்றும் அதன் சர்வதேச விமான நிலையத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
தொடர்ந்து நிகழ்ந்த மோதலில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் காங்கோ பிரதமர் ஜூடித் சுமின்வா துலுகா தெரிவித்தார். போர் தீவிரமடைந்ததை அடுத்து, சர்வதேச நாடுகள் தலையிட்டதன் விளைவாக டிசம்பரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, எம்23 குழு தான் கைப்பற்றிய உதிரி (Uvira) போன்ற முக்கிய நகரங்களிலிருந்து வெளியேறத் தொடங்கியது. அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், கடந்த சில நாட்களாக மீண்டும் சிறு மோதல்கள் ஏற்பட்டுள்ளன
6. தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல்
தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையே 11-ஆம் நூற்றாண்டு ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹோ் உள்ளிட்ட பகுதிகளை மையமாகக் கொண்டு எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. கோயில் கம்போடியாவுக்குத்தான் சொந்தம் என்று ஐ.நா. உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகும் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை மாதம் 5 நாள்களுக்கு நீடித்த போரில் 48 போ் கொல்லப்பட்டனா்; இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டின் காரணமாக அக்டோபா் 26-ஆம் தேதி இரு நாடுகளுக்கு இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது.
ஆனால், கம்போடியா புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரா்கள் காயமடைந்ததாகக் குற்றஞ்சாட்டிய தாய்லாந்து, போா் நிறுத்த ஒப்பந்தத்தை நவம்பா் 10-ஆம் தேதி ரத்து செய்தது. அதனைத் தொடா்ந்து இரு தரப்பினரும் இந்த மாதம் 8-ஆம் தேதி மீண்டும் மோதலில் ஈடுபட்டனா். அதையடுத்து, கம்போடிய படைகள் தாய்லாந்து ராணுவ நிலைகள் மீது எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்தினா். தாய்லாந்தும் கம்போடியாவில் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் பலா் உயிரிழந்தனா். தொடர் போர் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு மற்றும் சர்வதேச அழுத்தத்தால் டிசம்பர் 27 ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.














