என்னை ‘சக மனிதராக’ பங்கேற்க அழைத்ததால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் நாளை பங்கேற்கிறேன் என மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை நடைபயணம்’ மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் காஷ்மீரில் சென்று முடிவடைய உள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ஹரியானாவில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடைபயணம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொடண்டர்களும் இந்த நடைபயணத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தியா இழந்து கொண்டிருக்கும் மாண்புகளை மீட்டெடுத்து, புதிய இந்தியா படைப்போம். வாருங்கள்! தலைவர் நம்மவர் @ikamalhaasan அவர்கள் அழைப்பு!#KamalHaasan#BharatJodoYatra#டெல்லியில்நம்மவர் pic.twitter.com/o5QP77xvNG
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 23, 2022
இந்தநிலையில், டெல்லியில் நாளை ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொள்வதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். புதிய இந்தியாவை படைப்போம்….வாருங்கள்…என்னை ‘சக மனிதராக’ பங்கேற்க அழைத்ததால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் நாளை பங்கேற்பதாகவும், டெல்லி வாழ் தமிழர்கள் திரளாக கலந்துகொள்ள அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஹரியானாவில் இன்று தொடங்கிய இந்த நடைபயணத்தில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டார். இதில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, குமாரி செல்ஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.







