கர்நாடக பாஜகவின் முகமாக திகழ்ந்த ஜெகதீஷ் ஷெட்டார், ஈஸ்வரப்பா போன்ற தலைவர்கள் விலகல் அந்த மாநில பாஜகவின் வெற்றி வாய்ப்பை பதம் பார்க்குமா? அல்லது புதிய உத்வேகத்திற்கு வித்திடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது. அதற்கு விடை தேடுகிறது இந்த செய்தி…
தென்னிந்தியாவில் பாஜக தனித்து ஆட்சியைப் பிடிக்கும் வலுவுடன் இருப்பது கர்நாடகாவில் தான். 2008ல் கர்நாடகாவில் பாஜக தனித்து ஆட்சியமைத்தது. 2018ல் எதிர்க்கட்சியாக இருந்து, பின்னர் ஆளும் கட்சியாக மாறியது பாஜக. இதனால் மே , 10 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ,எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என , ஆளும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் நடப்பவை எல்லாம் அதற்கு தலைகீழாகவே உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெளிப்படையாக கைகோர்த்து கொண்டு, திரைமறைவில் உள்ளடி அரசியலில் சொந்த கட்சியினரே கவிழ்க்கும் கலையில் பெயர் போனது காங்கிரஸ் கட்சி. ஆனால் இப்போது உள்ளடி அரசியலில் , காங்கிரசை விட பலமடங்கு பாஜக விஞ்சி விட்டது என அக்கட்சியினர் நொந்து கொள்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாஜக வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலே பல தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. வேட்பாளர் பட்டியலில் பெயர் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான லக்ஷ்மண் சவடி அதிரடி முடிவை எடுத்தார். அது தான் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைவது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக தலைவர்களின் சமரச முயற்சிகளை ஏற்காக லக்ஷ்மன் சவடி, காங்கிரசில் இணைந்தார். அவருக்கு அந்த கட்சி அத்தானி தொகுதியை ஒதுக்கியதால் இன்பஅதிர்ச்சி அளித்தது.
அண்மைச் செய்தி – பொன்னியின் செல்வனில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி! – பூங்குழலி
ஊழல் புகாரில் சிக்கிய பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா, தமக்கு இந்த தேர்தலில் சீட் கிடைக்காது என்பதை முன் கூட்டியே உணர்ந்துவிட்டார். அதன் காரணமாக தேர்தல் அரசியலில் இருந்தே விலகுவதாக அவர் முன்கூட்டியே அறிவித்துவிட்டார். இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில், தமது உழைப்புக்கு பாஜக உரிய அங்கீகாரத்தை அளித்த திருப்தியுடன் விலகுவதாக கூறியுள்ளார். இந்த இருதலைவர்களின் விலகல் முடிவு பாஜக தொண்டர்களிடையே தாக்கத்தை உருவாக்கியது.
ஷெகதீஷ் ஷெட்டார் அதிருப்தி
பாஜக வெளியிட்ட 2-வது பட்டியலும் அக்கட்சி தலைவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பட்டியலில் முன்னாள் முதலமைச்சரும் லிங்காயத்து சமுதாயத் தலைவருமான வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டார் பெயர் இடம்பெறவில்லை. சபாநாயகர், அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவருக்கு இந்த புறக்கணிப்பு தாங்க முடியவில்லை. லக்ஷமண் சவடி, ஈஸ்வரப்பா ஆகியோரின் விலகல் முடிவில் இருந்து பாஜக மீண்டு வராத நிலையில் ஜெகதீஷ் ஷெட்டார் என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ என்று கேள்வி எழுந்தது. தமது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாததற்கு ஷெட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ”கடந்த சில நாட்களாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். பாஜகவின் உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகி விட்டேன். எதிர்காலத் திட்டம் பற்றி விரைவில் முடிவு எடுப்பேன்” என்று ஜெகதீஷ் ஷெட்டார் கூறியிருந்தார். சட்டப் பட்டதாரியும், வழக்கறிஞருமான ஜெகதீஷ் ஷெட்டார், 1994ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 6 முறை வென்றவர். தற்போது முதலமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மையையே, அவர் ஜனதா தளத்தில் இருந்த போது, ஒருமுறை தோற்கடித்துள்ளார்.
சீட் மறுப்பு ஏன்?
இளம் தலைமுறைக்கு வழிவிடும் வகையில் மூத்த தலைவர்களுக்கு சீட் கொடுக்க மறுப்பது பற்றி பாஜக முடிவெடுத்த உடனேயே, உட்கட்சி குழு ஒன்றை அமைத்து, சீட் மறுக்கப்படும் தலைவர்களுடன் பேச முடிவு எடுக்கப்பட்டது. ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டார், லக்ஷ்மண் சவடி போன்ற தலைவர்களிடமும் மேலிடத் தலைவர்கள் வரை பேசினர். அதில் பலன் கிடைத்தது ஈஸ்வரப்பா விவகாரத்தில் மட்டுமே. ஏனென்றால் அவர் மீதுள்ள ஊழல் புகார் தான். ஜெகதீஷ் ஷெட்டார் சீட் மறுக்கப்பட்ட விவகாரத்தில் பின்னணியில் இருப்பது முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும், பிரகலாத் ஜோஷியும் என்று நம்பப் படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியும், ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் பதவி தருவதாகக் கூறியும் ஷெட்டார் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார் ஜெகதீஷ் ஷெட்டார். செய்தியாளர்களிடம் பேசும் போது, கர்நாடகாவை ஆளும் பாஜக, வரும் தேர்தலில் சீட்டு கட்டு போல் சரியும் என்றார்.
அணிமாற்றமும், தாக்கமும்
ஜெகதீஷ் ஷெட்டார் விலகல், பாஜகவுக்கு 20 முதல் 25 தொகுதிககளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவரது ஆதரவாளர்களால் சொல்லப்படுகிறது. இதனை மறுக்கும் பாஜகவினர், மக்கள் தலைவரான எடியூரப்பாவுக்கு நிகரான தலைவர் ஷெட்டார் கிடையாது என்று திட்டவட்டமாக சொல்கிறார்கள். எடியூரப்பா, பாஜகவில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியைத் தொடங்கிய போது, பாஜகவை வழிநடத்திய ஷெட்டாருக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது என்றும் பட்டியலிடுகிறார்கள் பாஜகவினர்.
காங்கிரஸ் வியூகம்
பாஜகவின் அதிருப்தி அலை, தலைவர்களின் விரக்தி, காங்கிரசின் தேர்தல் அறிக்கை போன்றவை தங்களுக்கு சாதகமான அம்சமாக காங்கிரஸ் பார்க்கிறது. ராகுலின் பதவி பறிப்பு, பாஜகவின் சிறுபான்மையினர் எதிர்ப்பு போன்றவையும் சாதகமாக மாறி வெற்றிக்கு வித்திடும் என நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் ஆட்சிக் கனவுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரசும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே போன்றவர்களின் தீவிரப் பரப்புரையும் இதற்கு வழிவகுக்கும் என்று அக்கட்சி நம்புகிறது.
பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா போன்ற தேசிய தலைவர்களுடன், எடியூரப்பா போன்ற மாநிலத் தலைவர்களை பிரசாரத்தில் களமிறக்கி மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க திட்டமிட்டுள்ளது. குஜராத் தேர்தல் முடிவைப் போலவே தங்களுக்கு சாதகமான முடிவு இருக்கும் என்று பாஜக நம்புகிறது.
மூன்றாவது அணியாக போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் செயல்பாடும், ஆட்சி செய்து கொண்டிக்கும் பாஜகவுக்கும், மீண்டும் ஆளத் துடிக்கும் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பை சற்று பாழாக்கலாம். ஊழல், இடஒதுக்கீடு, விலைவாசி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகள், வாரிசு அரசியல் உள்ளிட்டவையே முக்கிய பிரச்னையாக தேர்தலில் எதிரொலிக்க உள்ளது. இதற்கெல்லாம் விடையைத் தேடி, மக்களின் மனங்களில் இடம் பிடிக்கும் கட்சியே, கர்நாடகாவில் நிச்சயம் ஆட்சியையும் பிடிக்கும் என்பது உறுதி…..
– ஜெயகார்த்தி