பாஜகவுக்கு குட்பை..! எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீஷ் ஷெட்டர்..!

பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடகா சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஜேடிஎஸ்,…

பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடகா சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஜேடிஎஸ், காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், பாஜகவில் மட்டும் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. காரணம், கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் பாஜக மீண்டும் சீட் வழங்கவில்லை என்பதால் தான். இதனால் அதிருப்தி அடைந்த் எம்.எல்.ஏக்கள் பலர் பாஜகவில் இருந்து தொடர்ந்து விலகி வருவதோடு, அவர்களுக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து வெளியேறி வருகின்றனர். அந்த வகையில், பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் அவர்களுக்கும் சீட் வழங்கப்படாமல் இருப்பதால் அவரும் முழு அதிருப்தியில் இருந்து வந்தார்.

மேலும், இந்த முறை அவரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என பாஜக மேலிடம் உத்தரவிட்டதாகவும், புதியவர்களுக்கு விட்டு கொடுக்கும்படி கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெகதீஷ் ஷெட்டர், தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டாலும், தனித்து போட்டியிடுவேன் என கூறியதோடு, கட்சியை விட்டு விலக போவதாகவும் அறிவித்திருந்தார். இதனையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் ஷெட்டரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்த முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர், ” 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியாற்றியும், பாஜக தன்னை நடத்திய விதம் வேதனை அளிக்கிறது. இதனால் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன், மேலும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். அடுத்து ஹூப்ளி-தர்வாட் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதா அல்லது கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பதை பின்னர் முடிவு செய்வேன் ” என கூறி இருந்தார்.

இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரியை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர், அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதன் மூலம் அவர் கர்நாடக பாஜக கட்சியில் இருந்து விலகி தனது பதவியை ராஜினாமா செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாலையே ஜெகதீஷ் ஷெட்டர் இந்த முடிவை எடுத்துள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகியதால், கர்நாடகாவின் வடக்கு பகுதியில் 30 தொகுதிகளை பாஜக பறிகொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த 30 தொகுதிகளை கைப்பற்றும் முயற்சியில், காங்கிரஸ் இறங்கியுள்ளது. மேலும் ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரஸ் கட்சியில் இணைக்கும் முயற்சிகளும், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.