மதுரையில் 2 ஆண்டுகளில் 387 பேர் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது ஆர்டிஐ தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் விஷம் அருந்துபவரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மருதுபாண்டி எழுப்பிய கேள்விக்கு மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு சுமார் 2 ஆயிரத்து 380 பேரும், 2022ம் ஆண்டு 2 ஆயிரத்து 550 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 930 பேர் விஷம் அருந்தியதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2021 ஆண்டு 180 பேரும், 2022ம் ஆண்டு 207 பேர் என இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 387 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், துரித சிகிச்சையின் காரணமாக 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








