வேலை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த மனைவியை வழி மறித்து பிளேடால் கழுத்தை அறுத்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கூடலூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் விக்டர் வினோத்குமார். இவர் கடந்த 2012ல் புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். விக்டர் வினோத்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் வந்துள்ளன. பல முறை விக்டர் வினோத்குமாரை குடிக்க வேண்டாம் என ஹேமா கூறியும், அவர் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை. இதனால் ஏற்பட்ட முரண்பாட்டால், கடந்த 6 மாத காலமாகக் கணவனைப் பிரிந்து, கீழப்பாதி வாய்க்கால்கரை தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.
சங்கரன்பந்தலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஹேமா எப்போதும் போல் பள்ளியில் வேலையை முடித்துவிட்டு செம்பனார்கோயில் கடைவீதி வழியாக வந்துள்ளார். அப்போது அங்கு, குடித்துவிட்டு வந்த விக்டர் வினோத்குமார், தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் எந்த பிரச்னையும் வராது எனவும் கூறி, தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு ஹேமா ஜூலியட் மறுக்கவே, ஆத்திரமடைந்த விக்டர் வினோத்குமார், மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து மனைவியின் கழுத்தைக் கிழித்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடம் செம்பனார்கோயில் காவல் நிலையம் அருகில் என்பதால், காவல்துறையினர் உடனடியாக வந்துள்ளனர். படுகாயமடைந்த ஹேமா ஜூலியடை மீட்டு , சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஹேமா ஜூலியட். பின்னர் வழக்குப் பதிவு செய்த போலீசார், விக்டர் வினோத்குமாரை கைது செய்தனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கடைவீதியில், குடிபோதையில் மனைவியின் கழுத்தை கணவன், பிளேடால் கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.








