கேரள மாநிலத்தை சேர்ந்த அப்பாவி பழங்குடி இளைஞர் மது என்பவரை பொய் குற்றச்சாட்டு சுமத்தி அப்பகுதி மக்கள் அடித்தே கொன்ற சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அச்சம்பவம் நிகழ்ந்தது இதே நாளில் தான். ஆம். அந்த அப்பாவி இளைஞர் மதுவிற்கு இன்று 4ம் ஆண்டு நினைவு தினம்.
கடவுளின் தேசம் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம், ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஓங்கி குரல் எழுப்பும் இடதுசாரி மக்களையும், எளிமையான தலைவர்களையும் கொண்ட மாநிலம் கேரளம் என்றுதான் நாம்அறிந்திருப்போம். ஆனால், அம்மாநிலத்தில் குறும்பர் எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு நேர்ந்த கொடுமை நமது எண்ணத்தையே மாற்றிவிடும்.
கேரள மாநிலம், அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது. கடந்த 2018ல் பலசரக்குக் கடையிலிருந்து அரிசியைத் திருடினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அந்தப்பகுதி மக்களால் தாக்கப்பட்டார். மது போலீஸாரால் மீட்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட வழியிலேயே இரத்தம் கக்கி உயிரிழந்தார்.
அந்த இளைஞரை அடித்தபின்பு, அவர் முகத்தில் ரத்தத்துடனும், சட்டைகிழிந்தபடியும் வெறுமையாக காட்சியளிக்கும் புகைப்படமும், அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் இரக்கமின்றி செல்பி எடுக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பிற்கு உள்ளானது. பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த மதுவின் வயிற்றில் ஒரு பருக்கைகூட உணவில்லை என்று வந்தது பலரின் நெஞ்சத்தையும் கலங்க வைத்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.
மதுவின் 4ம் நினைவு தினமான இன்று, அந்த கொலை வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. “கொலை நடந்து நான்கு வருடங்கள் ஆக போகிறது. இன்னும் ஏன் விசாரணையை ஆரம்பிக்கவில்லை என்று தெரியவில்லை. கேட்டால், காவல்துறையினர் வெவ்வேறு காரணங்களை அடுக்கிறார்கள். என்னிடம் பணமோ செல்வாக்கோ இல்லை.குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களும் இங்கே இத்தனை ஆண்டுகளாக சுதந்திரமாக திரிகிறார்கள். யாரை சந்தித்து நியாயம் கேட்பது என்று தெரியவில்லை” என்று மதுவின் தாய் மல்லி வழக்கின் நிலையை பேட்டி ஒன்றில் கூறுகிறார்.
இவ்வழக்கு, ஆரம்பத்திலிருந்தே பின்னடைவை சந்தித்து வருவதற்கு அரசியல் செல்வாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லப்படுகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெரும்பாலோனோர் ஆளும் சிபிஎம் கட்சியின் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் என்பது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஷம்சுதீன் கடந்த செப்டம்பரில் தான் சிபிஎம் கிளைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்ப அந்த முடிவு கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் நடந்தபோது, நாடு முழுவதிலும் இருந்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சமூக வலைதள போராளிகள் என பலரும் பொங்கி எழுந்தனர். ஆனால், தற்போது மது என்ற பெயரே பலருக்கும் மறந்து போயிருக்கும். மறதி எனும் தேசிய வியாதி கொண்டிருக்கும் நம் மக்கள் இதை மட்டும் மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்களா என்ன. ஒரு போட்டோ வியட்நாம் போரையே முடிவுக்கு கொண்டு வந்தது. அதேபோல், மதுவின் கடைசி புகைப்படத்தை பார்த்து இதுபோல் வேறு எவருக்கும் நடக்காமல் இருக்க வேண்டும். மதுவின் தங்கைக்கு அரசு வேலை வழங்பட்டது என்பது குறிப்பிடதக்கது.










