மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி விதிப்படி அரசு செயல்படாததால் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மசோதாக்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த…

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி விதிப்படி அரசு செயல்படாததால் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மசோதாக்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாரதியார் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 3 பல்கலைக் கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது.

அதில்,  உச்சநீதிமன்ற விதிப்படி துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.  துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி விதிப்படி அரசு செயல்படாததால் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்த அனுமதி கோரி,  கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்தது.  இது குறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள ஆளுநர் தரப்பு,  முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா,  சி.விஜயபாஸ்கார் மீதான விசாரணைக்கு ஆகிய இருவர் மீதும் விசாரணை நடத்த கடந்த 13ஆம் தேதியே ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகவும்,  கே.சி.வீரமணி மீதான விசாரணைக்கு ஒப்புதல் தர அரசிடம் விவரம் கேட்கப்பட்டதாகவும்,  தமிழ்நாடு அரசு அளித்த விவரம் நேற்று முன் தினம் பெறப்பட்டதாகவும் ஆளுநர் ஆ.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதா குறித்தும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பரிந்துரைத்த 165 கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்,  53 கைதிகளை விடுவிப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலினையில் உள்ளதாகவும் ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.