எப்பொழுதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் மானம் நிமிர்ந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மகன் பரிதி இளம்சுருதி திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் அமைச்சர் சேகர்பாபு, திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர். அப்போது மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியதாவது..
பரிதி இளம்வழுதி என்னுடைய உயிர் நண்பர். நானும் பரிதி இளம்வழுதியும் முதன்முதலில் சந்தித்த இடம் சிறைச்சாலை தான்.1989-ம் ஆண்டு போராட்டத்தில் சிறை சென்ற போது எங்களை சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள். அவ்வாறு மத்திய சிறையில் அடைத்த போது தான் பரிதிக்கும் எனக்குமான சந்திப்பு ஏற்பட்டது.
ஜான்சி ராணி பூங்காவில் 1980-ல் துணை அமைப்பு தேவைப்படுகிறது என்று இளைஞர் அணி அமைப்பை உருவாக்கினார்கள். பின் திருச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் இளம்வழுதி உரையாற்றினார் அப்போது தலைவர் கருணாநிதி அவரை அழைத்து தட்டிக் கொடுத்து மிகச் சிறப்பாக பேசுகிறாய் ஆனால் கொஞ்சம் அடக்கமாக பேச வேண்டும், வயதுக்கு ஏற்றார் போல் பேச வேண்டும் நீ வளரவேண்டியவன் என்று அறிவுரையும் சொன்னார்.
சுயமாக இளைஞர்களுக்காக ஒரு குழுவை உருவாக்கி அதற்கு தலைவராக கருணாநிதி என்னை ஆக்கினார். அதில் ஐந்து அல்லது ஆறு பேர் இருந்தார்கள். அந்தக் குழுவில் திருச்சி சிவா, சிவகங்கை மாவட்டம் சேர்ந்த பஞ்சவர்ணம் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தபருதி இளம்வழுதி உட்பட நானும் இருந்தேன்.
அமைப்பாளராக சேர்த்து படிப்படியாக வளர்ந்து செயலாளர்களாக மாறினோம். சென்னைக்கு பரிதி இளம்வழுதியை மாவட்டச் செயலாளராக அறிவித்தார்கள். அதற்கு பின் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டன. சட்டப் பேரவை தேர்தலை சந்தித்த போது ராஜீவ்காந்தியின் மரணத்தை காரணம் காட்டி திமுக-வை வீழ்த்தினார்கள். இரண்டே தொகுதியில் தான் வெற்றி பெற்றோம். பரிதி இளம்வழுதி தன்னந்தனியாக நின்று என்ன பிரச்சனை வந்தாலும் தைரியமாக பிரச்சனைகளை தட்டி கேட்கிற ஒரு மனிதர். இதையெல்லாம் பார்த்து பரிதிக்கு இந்திரஜித் என்று கருணாநிதி பட்டம் கொடுத்தார்.
கலைஞரின் பேனா சாதித்தது என்ன..?
1967-ல் பிப்ரவரி 10-ல் தான் கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்றார். ஐந்து முறை முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகளை தியாகத்தை கணக்கிட முடியாது. எப்பொழுதெல்லாம் அவருடைய பேனா குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் மானம் நிமிர்ந்தது.
வள்ளுவர் கோட்டம், டைடல் பார்க் போன்றவற்றை உருவாக்கியதற்காக கையெழுத்திட்ட பேனா, குடிசைகளை மாற்றி அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்ட வேண்டும் என்று குடிசை மாற்று வாரியத்திற்காக கையெழுத்து போட்ட பேனாதான் கருணாநிதியின் பேனா.
லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது கருணாநிதியின் பேனா. தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றிய அந்த பேனாவை வைத்து தான் இன்றைக்கு திராவிட மாடலின் அரசு நடந்து கொண்டிருக்கிறது.“ இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
– யாழன்







