ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த அனுமதி
அளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து
உத்தரவிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் 45 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்து, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த உத்தரவிட்டது தவறு என்பதால், இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாதிட்டார்.
ஒருபுறம் அமைதி பூங்கா எனக் கூறி விட்டு, இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை
என அனுமதி மறுப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தரப்பில்
வலியுறுத்தப்பட்டது.
அண்மை செய்தி – கருணாநிதியின் பேனா செய்தது என்ன..? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை தரப்பில், சுற்றுச்சுவருடன் கூடிய
மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அணிவகுப்பு நடத்தப்பட மாட்டாது என ஆர்எஸ்எஸ்
அறிவித்த நிலையில், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்ததாகவும்,
உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் காவல் துறையினர் செயல்பட்டதாகவும்
அரசுத் தரப்பில் அப்போது விளக்கமளிக்கப்பட்டது.அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல்
துறை அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை
பிறப்பிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தனிநீதிபதியின் உத்தரவு ரத்து
இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அமர்வு, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.
அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போது 3 தேதிகள் குறிப்பிட வேண்டும் அதில்
காவல்துறை பரிசீலித்து ஒரு தேதியில் அனுமதி வழங்க வேண்டும்-
மேலும், கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட
வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அணிவகுப்புக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்க காவல் துறைக்கும் உத்தரவிட்டனர்.









