பான் கார்ட் விதிகளில் புதிய மாற்றம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி ஆதார் அட்டை நகலை மட்டும் சமர்பித்தால் போதாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு முக்கிய அடையாள ஆவணமாகும். நிதி பரிவர்த்தனைகள், வருமான வரி செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு பான் கார்டு கட்டாயமாகும். 10 இலக்கங்கள் கொண்ட இந்த பான் கார்டை வருமான வரித்துறையின் கீழ் செயல்படும் இணையதளத்தில் விண்ணப்பித்து பெற முடியும். தற்போது வரை ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும். அதை வைத்து உடனடியாக பான் எண் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்த விதிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இனி பான் கார்டு விண்ணப்பத்தின் போது பிறந்த தேதியை உறுதி செய்ய ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசின் பொது சேவை அமைப்பு கூறியிருப்பதாவது, “பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின்படி ஆதார் அட்டையுடன் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆதார் மட்டுமே போதுமானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பத்தாம் வகுப்பு கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை பிறந்த தேதிக்கான ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.