விரைவில் அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்டெடுப்போம் என உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு அளித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நடந்து முடிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நேற்று தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு ஒபிஎஸ் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தனது ஆதரவாளர்களுடன், உசிலம்பட்டி தேவர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி அளித்தார். அப்போது அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது, அதில் உள்ள தீர்மானங்கள் குறித்து எதுவும் சொல்லவில்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும். விரைவில் தேர்தல் ஆணையம் சென்று அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்டெடுப்போம் என பேட்டியளித்தார்.