பழனி நகராட்சியில் அடி குழாய் மீது அமைக்கப்பட்ட தார்சாலையால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் 33வார்டுகள் உள்ளன. இங்குள்ள 7வது
வார்டு பகுதிக்கு உட்பட்ட கீழ் வடம் போக்கி தெருவில் நகராட்சி சார்பில்
தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் சாலை அமைக்கும் பகுதியில் உள்ள அடிகுழாய் ஒன்றையும் சேர்த்து தார்சாலை அமைத்து மூடியதால் தண்ணீர் பிடிக்க முடியாமல் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். நல்ல நிலையில் செயல்பட்டு வந்த அடிகுழாயை மூடி தார்சாலை அமைத்துள்ளதால் தண்ணீர் பிடிப்பதில் இப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 7வது நகராட்சி உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் உள்ளார்.
தார்சாலை அமைக்கும்போது பழைய சாலையை தோண்டி எடுத்துவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை மதிக்காமல், அதன்மீதே புதிய சாலை அமைத்துள்ளதாகவும், தார்சாலை அமைக்கும்போது, நல்ல நிலையில் செயல்பட்டுவரும் அடிகுழாயை மூடி தார்ச்சாலை அமைக்கலாமா? என்ற அடிப்படை யோசனைகூட இல்லாமல், வார்டு கவுன்சிலர் முதல் சாலை அமைத்த ஒப்பந்ததாரர், மற்றும் நகராட்சி அதிகாரிகள் வரை யாருமே இதை கண்டுகொள்ளாமல் இருந்தது எப்படி என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் பைக்,அடிகுழாய் ஆகியவற்றை சேர்த்து தார்சாலை அமைத்து வருவதாகப் புகார்கள் எழுந்தநிலையில் தற்போது பழனியிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது இப்பகுதி பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கும் விதமாக நல்லமுறையில் செயல்பட்டு வந்த அடிகுழாய் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகியுள்ளதாகவும், எனவே தண்ணீர் பிடிக்கும் வகையில் அடிகுழாயை நகராட்சி அதிகாரிகள் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகர்மன்ற கவுன்சிலர் சுரேஷிடம் பலமுறை முறையிட்டும் அதை சரிசெய்ய அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கவுன்சிலர் முதல் நகராட்சி அதிகாரிகள் வரை அனைவரது கண்களிலும் படாமல் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-வேந்தன்







