முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி


பி.ஜேம்ஸ் லிசா

கட்டுரையாளர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தங்களுடைய பரப்புரை யுக்தியை மட்டுமே பயன்படுத்தி, மக்களின் மனங்களை ஈர்த்து, தனது வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி  நிரூபித்துக்காட்டியுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக  வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 2ம் இடம் இடத்தை பிடிக்க, நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தை பிடித்து அசத்தியிருப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மறைவையடுத்து அந்த தொகுதியில், கடந்த மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியினர். இவர்களுடன் 73 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். 70 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சித்தோடு பகுதியில் உள்ள கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்க, இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தொடர்ந்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன், இந்த தொகுதியில் 2011-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற தேமுதிகாவை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் குறிப்பிட்ட சில மாதங்களிலோ அல்லது ஆண்டுகளிலோ வேறொரு பெரிய கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக ஆகும் நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் அதிலிருந்து சற்று விதிவிலக்காக இருந்து வருகிறது. கட்சி ஆரம்பித்த நாள் முதலே தங்களது கொள்கையில் இருந்து சற்றும் மாறாமல், ஒரே நிலைப்பாட்டுடன் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகிய அனைத்து தேர்தல்களையும் சந்தித்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டது. 2011ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. என்றாலும் இலை மலர்ந்தால் ஈழம் மலரும்  என்ற கோட்பாட்டை வலியுறுத்தி, அதிமுகவுக்கு ஆதரவாக தனியாக பரப்புரை மேற்கொண்டார். அந்த தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பலத்துடன் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது.

2016-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் அதாவது நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வருகிறது. 2016-ஆம் ஆண்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு மொத்தமாக 4,58,104 வாக்குகள் (1.07 சதவீதம்) பெற்று 9-வது இடத்தை பிடித்தது.

இதையடுத்து 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 3,802 வாக்குகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தது. பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 2.63 சதவீத வாக்குகள் பெற்றது. இதற்கு பிறகு கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் மொத்தமாக 31,08,906 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கோமதி 11,629 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில் திமுக, அதிமுக ஆகிய ஆளுமைமிக்க, தமிழ்நாட்டை 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வரும்  இவ்விரு கட்சிகளை தாண்டி, தற்போது நடத்தப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்ட  நாம் தமிழர் கட்சி  அதிக வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்து உள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேமுதிகவை பின்னுக்குத் தள்ளி உள்ளது. நம்ம தமிழர் கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் 10,804 வாக்குகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளார். 6.35 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். இது 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈரோடு கிழக்கில் கோமதி பெற்ற வாக்குகளை விட குறைவு என்றாலும், அதே 3-வது இடத்தை இந்த முறையும் பெற்று தனது வாக்கு வங்கியை தக்கவைத்துள்ளது.

எது எப்படியிருந்தாலும் கட்சி தொடங்கியதில் இருந்து அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 3-வது , 4-வது இடத்தை பிடித்தாலும், தன் கொள்கைகளில் இருந்து மாறாமல் அடுத்தடுத்தடுத்து யாருடைய துணையும் இன்றி எப்படி தன்னிச்சையாக முன்னேறி செல்வது என்பதை நோக்கி தன் கொள்கைப் பயணத்தை தொடர்ந்து வருகிறது.

ஆளும் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், எதிர்க்கட்சியான அதிமுக, தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற கட்சியான தேமுதிக என இந்த 3 கட்சிகளை தாண்டி, தனித்து களம் கண்டு,  இவ்வளவு பெரிய உயரத்தை நாம் தமிழர் கட்சி எட்டிப் பிடித்துள்ளது. வரும் காலங்களிலும் இலக்கை நோக்கிய வெற்றிக்கான முன்னெடுப்பு இன்னும் சிறப்பாகவே இருக்கும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் நம்பிக்கையோடு தங்களது பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஈரோடு இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை!..

Jayasheeba

33வது பிறந்த நாளை கொண்டாடும் அனுஷ்கா ஷர்மா பற்றிய அறியப்படாத தகவல்கள்!

Halley Karthik

கே.எல்.ராகுல் திருமணம் – ரூ.2.70 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த கோலி

Web Editor