கூட்டணி முறிவுக்கு பிறகே அதிகம் விமர்சிக்கப்படுகிறோம்..! – சேலத்தில் இபிஎஸ் பேட்டி

2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக…

2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக தேர்தல் முகவர் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பற்றி மட்டுமே முழுவதுமாக பேசியதாக தெரிவித்தார்.

தனது அறிக்கையில் இதுவரை தான் பொய் செய்தி வெளியிட்டதே கிடையாது என கூறிய எடப்பாடி பழனிசாமி,  தான் பொய் சொல்வதாக ஸ்டாலின் கூறுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் சாடினார். திமுக ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என கூறிய அவர், பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகே தங்களை அதிகமாக திமுக விமர்சனம் செய்வதாக குற்றம்சாட்டினார்.

ஒரு கட்சியில் கூட்டணி வைப்பதும் விலகுவதும்,  அக்கட்சியின் தனிப்பட்ட முடிவாக இருக்கும்போது, தன் மீதும் அதிமுக மீதும் அடிப்படை ஆதாரம் இன்றி விமர்சனம் செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதனையும் படியுங்கள்: அரசியல் சாசனத்திற்கு துரோகம் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – டி.ஆர்.பாலு சாடல்

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, 100% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக திமுக பொய் பேசி வருகிறது என்றும் கூறினார். 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும்  2026 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என உறுதிபடக் கூறிய எடப்பாடி பழனிசாமி, இந்தியா கூட்டணி நீடிக்குமா? நீடிக்காதா? என்பது வருங்காலத்தில் தான் தெரியும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.