தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை அசோக் நகர், மயிலாப்பூரில் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது, “ சென்னையில் குற்றச் செயல்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் சென்னை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் சென்னை மக்களின் அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை என கேள்வி எழுப்புகிறார்.
அதிமுக ஆட்சியில்தான் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதை அகற்றச் சென்னையில் மட்டும் 954 கிலோ மீட்டர் நீள மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் கூறினார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.







