தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு கவையான ஆண்டாகவே இருந்தது. கோலிவுட்டில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டில் 285 படங்கள் வெளியானது. ஆனாலும் இவற்றில் 10 சதவீத படங்கள் மட்டுமே வெற்றி மற்றும் இலாபத்தை தந்தன. 2025ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் போக்கு எப்படி இருந்தது என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்த ’மத கத ராஜா’
விஷால் – சுந்தர் சி கூட்டணியில் உருவாகி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாக திட்டமிடப்பட்ட திரைப்படம் ’மத கத ராஜா’. பல்வேறு பிரச்னைகள் காரணமாக நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு ’மத கத ராஜா’ திரைப்படம் 2025 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் நாள் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்தது.
விஷால்- சுந்தர் சி காம்போவின் காமடி கலந்த ஆக்ஷன் அனைவரையும் கவர்ந்தது. அதிலும் பழைய சந்தானத்தை திரையில் பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர். 12 ஆண்டுகள் கழித்து வெளியாகிருக்கும் மத கத ராஜா திரைப்படம் ஃபிரீ ஹிட்டாக 50 கோடிக்கும் மேல் வசூலித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
வசூலில் அசத்திய படங்கள்
இந்த ஆண்டு வெளியான அஜித்தின் ’குட் பேட் அக்லி’, விஜய் சேதுபதியின் ’தலைவன் தலைவி’, மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் வெளியான ’பைசன்’, சிவகார்த்திகேயனின் ’மதராசி’, விக்ரமின் ’வீர தீர சூரன்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்து வெற்றி படங்களாகின.
மேலும் தனுஷ் இயக்கி நடித்து வெளியான இட்லி கடை திரைப்படமும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் 2025 ஆண்டில் வெளியான நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ’டிராகன்’ மற்றும் டியூட் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து 100 கோடிகளை வசூலித்து அசத்தியது.
ஏமாற்றிய பெரிய படங்கள்
இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்த்த திரைப்படங்கள் ரசிகர்களை ஏமாற்றியது என்று தான் சொல்ல வேண்டும். தக் லைஃப், கூலி, விடா முயற்சி, ரெட்ரோ, உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்ய தவறின. தனுஷின் ’குபேரா’ மற்றும் ’தேரே இஷ் மே’ ஆகிய திரைப்படங்கள் தமிழை விட தெலுங்கு, இந்தி மொழிகளில் ரசிகர்களை கவர்ந்தது.
மாஸ் காட்டிய சின்ன பட்ஜெட் படங்கள்
2025 ஆம் ஆண்டில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள் எதார்த்தமான திரைக்கதை மூலம் பார்வையாளர்களின் மனதில் இடம்பிடித்தன. அதன் படி சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, மணிகண்டனின் குடும்பஸ்தன், சூரியின் மாமன், சரத்குமார்-சித்தார்த் நடித்த 3 பிஹெச்கே, விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன், ரியோவின் ஆண்பாவம் பொல்லாதது, விக்ரம் பிரபு நடித்த சிறை ஆகிய படங்கள் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
தள்ளிப் போன வெளியீடு
விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’(LIK) திரைப்படத்தின் வெளியீடு 2026-க்குத் தள்ளிப் போனது. படத்தின் கதாநாயகனான பிரதீப் ரங்கநாதனின் மற்றொரு படமான ’டியூட்’ திரைப்படத்தின் வெளியீடு காரணமான இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனதாக கூறப்படுகிறது. சூது கவ்வும் பட இயக்குநரான நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படமானது இந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கடன் சிக்கல் காரணமான இப்படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டிற்கு தள்ளி போயுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள லாக்டவுன் திரைப்படமானது இந்த ஆண்டு டிசம்பர் டிசம்பர் 5, 2025 அன்று வெளியாக இருந்தது. ஆனால் சென்னை கனமழை, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் காரணங்களால் இதன் வெளியீடு 2026-ன் தொடக்கத்திற்கு தள்ளிப்போயுள்ளது.
சர்ச்சைகளில் சிக்கிய படங்கள்
கோலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் சர்ச்சைகளில் சிக்கவும் தவரவில்லை. மணி ரத்னம் – கமல் ஹாசன் கூட்டணியில் வெளியான ’தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல் ஹாசன் “கன்னட மொழி தமிழிலிருந்து பிறந்தது” என்று கூறினார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கமல் மன்னிப்பு கேட்கும் வரை படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக வர்த்தக சபை அறிவித்தது. பெங்களூரு மற்றும் பிற பகுதிகளில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. கர்நாடக உயர் நீதிமன்றம் மன்னிப்பு கூற அறிவுறுத்தியும கமல் ஹாசன் தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, ஜூன் மாத இறுதியில் பலத்த பாதுகாப்புடன் ‘தக் லைஃப்’ கர்நாடகாவில் வெளியானது.
விஜய் தேவர கொண்டா நடிப்பில் வெளியான ‘கிங்டம்’ திரைப்படமும் சர்ச்சையில் சிக்கியது. இப்படத்தில் இலங்கைத் தமிழர்கள் மற்றும் போராளிகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சில இடங்களில் படம் வெளியான திரையரங்குகளில் முற்றுகை இடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, படத்தைத் திரையிடப் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம், திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கத் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது.
வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் தயாரித்து வர்ஷா பரத் இயக்கி வெளியான திரைப்படமும் ‘பேட் கேர்ள்’. இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரித்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது. சமூக வலைதளங்களங்களும் இப்படம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மோகன்லால் நடிப்பில், பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் 2025 மார்ச் மாதம் வெளியான ‘L2: எம்பூரான்’. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இப்படம் சர்ச்சையில் சிக்கியது. படத்தின் திரையிடலை தடை செய்ய வேண்டு என்று தமிழ் அமைப்புகல் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் இப்படம் குஜராத் கலவரம் சர்ச்சையிலும் சிக்கியது.
கைவிடப்பட்ட படங்கள்
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க ரஜினி காந்தின் 173 ஆவது படத்தை இயக்குநர் சுந்த சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு பின் சுந்தர் சி படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் அடுத்த இயக்குநர் யார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.














