திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.

புதுச்சேரியில் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் தர்மபால சோழ மன்னரால் கட்டப்பட்ட திருக்காமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது.

இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த தேர் திருவிழாவில் புதுச்சேரி மட்டுமின்றி அருகில் உள்ள தமிழக பகுதியான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் மாட வீதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.