இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கடலோர ஆந்திரப்பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை வடக்கு தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருபத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூரின் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.