புதுச்சேரி மாவட்டம் காரைக்கால் அடுத்த திருநள்ளாற்றில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் மே 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வீதியுலா, தேர்த்திருவிழா நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் விழாவின் ஒரு பகுதியாக இரவு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அலங்காரத்தில் தங்ககாக்கை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஸ்ரீ சனிபகவான் தங்ககாக்கை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவார். எனவே நள்ளிரவில் நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ சனிபகவான் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதியுலா வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுர ஆதீன கட்டளை ஸ்ரீமத் சுப்ரமணிய தம்பிரான் சுவாமிகள், ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இன்று இரவு நடைபெற உள்ளது.








