“முதலமைச்சர் பேச வேண்டும் என்று பேட்ஜ் அணிந்து வந்தவர்கள், அவர் பேசத் தொடங்கியதும் ஏன் வெளியேறினர்?” – செங்கோட்டையன் கேள்வி

முதலமைச்சர் பேச வேண்டும் என்று பேட்ஜ் அணிந்து வந்தவர்கள், அவர் பேசத் தொடங்கியதும் ஏன் வெளியேறினர்? என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினர்.

கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, அரசின் செயல்பாடுகள் “சினிமா பாணியில்” உள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு “வானதி சீனிவாசன் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் அளிக்க முடியாது. கருத்து தெரிவிப்பது வேறு, எதை வேண்டுமானாலும் கொச்சைப்படுத்தி பேசுவது வேறு. முதலமைச்சர் கூறிய கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது எந்த இடையூறும் ஏற்படுத்தப்படவில்லை. முதல்வர் பேச வேண்டும் என்று கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தவர்கள், அவர் பேசத் தொடங்கியதும் ஏன் வெளியேறினர்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எந்தக் கேள்வியும் கேட்பார்கள். இந்த அரசு நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே முதலமைச்சர் விஜயின் நோக்கம். வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை. அந்தத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது,” என்றார்.

மந்தை புறம்போக்கு உள்ளிட்ட பல்வேறு வகை நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் திட்டங்கள் தயாராகி வருவதாகவும், தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து பேசிய அவர், “நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. விமான நிலைய விரிவாக்கத்திற்காக இன்னும் 10 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. சேலம் விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓசூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை,” என்றார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய மருத்துவக் கல்லூரி விண்ணப்ப விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, “நயினார் நாகேந்திரன் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்தக் கட்சியில் பதவி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். நான் அமைச்சராக இருக்கிறேன். அவர் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் கொடுத்தாரா, இல்லையா என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அடுத்த செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆதாரத்தை நேரடியாகக் காட்டுகிறேன்,” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.