பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எல்லை இல்லாமல் போய்விட்டது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எல்லை இல்லாமல் போய்விட்டது. விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் வீடு,…

பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எல்லை இல்லாமல் போய்விட்டது. விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை இன்று காலை முதல் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.எம்பி ஜெகத்ரட்சகன் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்தவில்லை என்பதன் அடிப்படையிலேயே இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் (எக்ஸ்) பதிவில் கூறியதாவது,

”ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்துவது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எல்லை இல்லாமல் போய்விட்டது. விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதற்கு இதுவே எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசின் அமைப்புகள் ஏவி விடப்படுகின்றன.

https://twitter.com/mkstalin/status/1709820887061639295

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே நடவடிக்கை எடுப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். அமலாக்கத்துறை நியாயமாக வெளிப்படைத்தன்மையாக செயல்பட வேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை வசதியாக மறந்துவிட்டு பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் பாஜக ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு பாஜக அச்சம் அடைந்திருப்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. எதிர்க்கட்சியினரை குறி வைத்து விசாரணை நடத்துவதை இதோடு பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.