ஐபிஎல் தொடரின் பிரபலமான அணிகளுள் ஒன்று சென்னை அணியாகும். 2008 முதல் 2023 வரை சென்னை அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி செயல்பட்டார். தற்போது அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வார்ட் உள்ளார்.
மேலும் சென்னை அணி ஐந்து முறை (2010, 2011, 2018, 2021, 2023) ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. தமிழ் நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் சென்னை அணிக்கான ரசிகர் பட்டாளம் உள்ளது.
தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையை ஹோம் கிரவுண்டாக கொண்டுள்ளதால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சென்னை அணிக்கு பெரும் செல்வாக்கை கொண்டுள்ளது.
ஐ.பி.எல் 2026 அட்டவணை : சென்னை அணிக்கான போட்டிகளின் முழு விவரம்……!
இதனால் தமிழ் நாட்டு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அண்மையில் சென்னை அணி வெளியிட்ட விளம்பரங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர், கூலி, ஜெயிலர் 2 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் பிஜிஎம்கள் இடம்பெற்றிருந்தன
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் தொலைக்காட்சி குழுமமானது, நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர், கூலி, ஜெயிலர் 2 திரைப்படங்களில் பிஜிஎம் மற்றும் பாடல்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிடக்கூடாது என்று சென்னை அணிக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தொலைக்காட்சி குழுமம் தரப்பில் காப்புரிமை உள்ள படங்களின் இசையை அனுமதி இல்லாமல் சிஎஸ்கே பயன்படுத்தியதாக வாதிடப்பட்டது.
சென்னை அணி தரப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாடல்களின் சில பகுதிகளைப் பயன்படுத்தி வருவதாகவும், மனுதாரர் இதற்கு முன்பு ஆட்சேபனைகளை எழுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக தொலைக்காட்சி குழுமத்திடமிருந்து உரிமம் பெறாமல் ஜெயிலர், கூலி, ஜெயிலர் 2 திரைப்படங்களில் பிஜிஎம் மற்றும் பாடல்களை பயன்படுத்த மாட்டோம் என்று சென்னை அணி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை பதிவு செய்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வழக்கை மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை அணியை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.







