அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் நாட்டு உச்சத் தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராக காமெனியின் மகன், மொஜ்தபா காமெனி பொறுப்பேற்றுள்ளார்.
காமெனி கொலைக்கு பழிவாங்கும் பொருட்டு இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஓமன் நாட்டில் ஈரான் நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலால் இந்தியர்கள் 2 பேர் உயிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (வளைகுடா) அசீம் மகாஜன் கூறியுள்ளதாவது ; மஸ்கட்டில் உள்ள சோஹர் நகரில் இன்று ஒரு தாக்குதல் நடந்தது, இந்த சம்பவத்தில், இரண்டு இந்தியர்கள் இறந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தாக்குதலில் 10 இந்தியர்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஐந்து பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் யாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






