வடசென்னையில் ஏடிஎம் மையத்திற்கு வரும் முதியோர்களை குறிவைத்து நூதன முறையில் பணம் திருடிய மத்திய அரசு ஊழியர். பைக்கில் ஒட்டிய ஸ்டிக்கரால் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எச்சரிக்கை தேவை
ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது முதியோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முதியோர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றால் உடன் குடும்பத்தினர் ஒருவரை அழைத்து செல்ல வேண்டும் என்பது தொடர்பான அறிவுரைகளை சென்னை காவல்துறை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். ஆனால் முதியோர் தனியாக வந்து ஏடிஎம்மில் பணம் எடுக்க வருவோரை குறித்து நூதன முறையில் பணம் திருடப்பட்டு வந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. 
சிக்கியது எப்படி?
வடசென்னையான வியாசர்பாடி, எம்கேபி நகர், கொடுங்கையூர் பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் எடுக்க வரும் வயதான பெண்களை குறிவைத்து ஏடிஎம் கார்டுகளை திருடி பணத்தை கொள்ளையடித்து வந்த சம்பவங்கள் தொடர்ந்து வந்துள்ளது. இது தொடர்பாக எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜாக்லின் என்பவர் தனது முதல் மாத சம்பளத்தை எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் எடுப்பதற்காக சென்றார். ஆனால் புது ஏடிஎம் கார்டு என்பதால் ஜாக்லின் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அங்கு இருந்த அடையாளம் தெரியாத நபர் உதவி செய்வது போல நடித்து ஏடிஎம் கார்டை திருடிச்சென்று விட்டார். ஆனால் அவரது கையில் வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு மோசடி நபர் நைசாக நழுவி விட்டார். இந்நிலையில் சிறிது நேரத்தில் ஜாக்லின் வங்கி கணக்கில் இருந்து 29 ஆயிரத்து 500 ரூபாய் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் தீவிர விசாரணை
எம்கேபி நகர் காவல் ஆய்வாளர் வர்கீஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை களத்தில் இறங்கினர். வியாசர்பாடி எஸ்பிஐ வங்கி ஏடிஎம் வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஏற்கனவே அதே பகுதியில் நடந்த ஏடிஎம் பணம் திருட்டு தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சியிலும் அதே நபர் தான் இருந்துள்ளார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் திருட்டு ஆசாமியின் உருவங்கள் பதிவான சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் அவர் எங்கெல்லாம் சென்றார் என்பது தொடர்பாக ஒவ்வொரு சிசிடிவி காட்சிகளையும் போலீசார் பின்தொடர்ந்தே ஆய்வு செய்தனர். வியாசர்பாடி பகுதியில் இருந்து பெரம்பூர் வரை திருட்டு ஆசாமி செல்லும் வழியே உள்ளே சுமார் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
திருட்டு ஆசாமியை பெரம்பூர் பாரதி தெருவில் வைத்து எம்கேபி நகர் போலீசார் லாவகமாக கைது செய்து செய்தனர். அவரது பெயர் பிரபு என்பதும், 55 வயதான அவர் ஆவடி டேங்க் பேக்டரியில் மத்திய அரசு ஊழியராக பணியாற்றி வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பிரபு ஏடிஎம் பணம் திருட செல்லும் போது பயன்படுத்திய பைக்கே அவரை காவல்துறைக்கு காட்டு கொடுத்துள்ளது. தேசியக்கொடி மற்றும் பிள்ளையார் சிலை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதனை அடையாளமாக வைத்தே பிரபுவை பிடிக்க முக்கிய துப்பாக அமைந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
மத்திய அரசு ஊழியரின் கைவரிசை
மத்திய அரசு ஊழியரான பிரபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இவர் கடந்த சில மாதங்களாகவே ஏடிஎம் மிஷின்களில் வரக்கூடிய பெண்கள் மற்றும் வயதானவர்கள் என அவர்களை மட்டும் குறிவைத்து அவர்களுக்கு உதவி செய்வது போல ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பணத்தை எடுத்துக் கொடுத்தும் பின்பு அந்த ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து அந்த ரகசிய எண்ணை வைத்து அவர்கள் கணக்கில் உள்ள மொத்த தொகையும் நூதன முறையில் திருடி வந்ததாக கைதான பிரபு வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரபுவிடம் இருந்து 271 டெபிட் கார்டுகள் மற்றும் அவருடைய இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய அரசு ஊழியராக இருந்து கொண்டு மாதம் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வந்த பிரபு இதுபோன்று நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மகளின் திருமணத்திற்கு கடன் வாங்கியதால் சிக்கல்
குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கும் நல்ல மனிதராக இருந்து வந்த பிரபு,
தனது மகளை திருமணம் செய்து வைத்ததற்காக லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வட்டிக்காக வாங்கியுள்ளார்
என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுமார் 15 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி இருந்த பிரபு வாங்கிய சம்பளத்தை பெரும்பாலும் வட்டிக்காகவே கொடுத்துள்ளார். கடனை அடைக்க முடியாமல் பெரும் நெருக்கடிக்கு ஆளானதால் இதுபோன்று நூதன முறையில் கொள்ளையடிக்க துவங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
சிக்கிய மோசடி பேர்வழி
கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக வடசென்னை பகுதிகளில் உள்ள பல்வேறு ஏடிஎம்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏடிஎம் மிஷினை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு உதவுவது போல், அவர்கள் ஏடிஎம் கார்டை திருடி பணத்தை கொள்ளையடித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக பணம் எடுக்க வரும் நபரின் வங்கி ஏடிஎம் கார்டை திருடி , அதே வங்கி ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ஏமாற்ற, பல்வேறு ஏடிஎம்களில் பணம் எடுத்துவிட்டு மறந்து விட்டு செல்லப்பட்ட ஏடிஎம் கார்டுகளை எடுத்து வைத்திருந்து மோசடிக்கு கைதான பிரபு பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
நூதன முறையில் ஏடிஎம் கார்டுகளை திருடி கொள்ளையடித்த லட்சக்கணக்கான பணத்தையும் வாங்கிய கடனுக்காக வட்டியை செலுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரபுவை விசாரணைக்குப் பிறகு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வரும் முதியோர்கள் இது போன்ற திருடர்களிடம் ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும் என்ற அறிவுரையை சென்னை காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
-R. சுப்பிரமணியன், குற்றப்பிரிவு தலைமைச் செய்தியாளர்








