சத்தீஸ்கரில் தான் வசிக்கும் பகுதியை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி 21 ஆண்டுகள் தாடியை வெட்டாமல் போராட்டம் நடத்தி வந்தவர், கோரிக்கை நிறைவேறியதும் தற்போது தாடியை வெட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் வசிக்கும் பகுதியை மாநிலத்தின் 32வது மாவட்டமாக மாற்றி அறிவிக்கும் வரை தாடியைச் சவரம் செய்யமாட்டேன் என்று வினோதமான குறிக்கோளுடன் 21 வருடங்களாகத் தாடியை வளர்த்து வந்த நபர் தற்போது தாடியை எடுத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் மனேந்திரகர் பகுதியில் வசிப்பவர் ராம சங்கர் குப்தா. ஆர்டிஐ ஆர்வலராக இருக்கும் இவர், மனேந்திரகர் – சிர்மிரி – பாரத்பூர் பகுதியை இணைத்து சத்தீஸ்கரின் 32-வது மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். மேலும் தன் கோரிக்கை நிறைவேறும் வரை தனது தாடியை எடுக்க மாட்டேன் என விநோத போராட்டத்தையும் கையில் எடுத்தார்.
தனது சபதத்தை கடந்த 21 ஆண்டுகளாக அவர் கடைப்பிடித்தும் வந்துள்ளார். இந்த நிலையில், தற்போது சத்தீஸ்கர் அரசு அந்த பகுதியை மாநிலத்தின் 32-வது மாநிலமாக அறிவித்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மனேந்திரகர் – சிர்மிரி – பாரத்பூர் பகுதியை அதிகாரப்பூர்வமாக மாவட்டமாக அறிவித்துள்ளார். இதையடுத்து, ராம சங்கர் குப்தா தனது தாடியை எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டே இந்த பகுதியை மாவட்டமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போதே தாடியை அவர் எடுத்துவிட்டார். பின்னர் பணிகள் தொடங்கப்படாத நிலையில் மீண்டும் தாடி வளர்க்க தொடங்கினார். இந்நிலையில், தற்போது பணிகள் தொடங்கப்பட்டதையடுத்து, அவர் ஒருவருடம் வளர்ந்த தாடியை மீண்டும் எடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த பகுதி மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை என்றால், வாழ்நாள் முழுவதும் தாடி வளர்த்திருப்பேன் என்றார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் பூபேஷ் பாகேல்லுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த மாவட்டம் சத்தீஸ்கரில் மட்டுமின்றி நாட்டிற்கே முதன்மையான மாவட்டமாக மாற வேண்டும் என விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்








