ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்க 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மலைப்பூண்டு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளை, முட்டைகோஸ், அவரை, முள்ளங்கி, மலைப்பூண்டு போன்ற காய்கறிகள் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செய்யப்பட்ட மலைக் காய்கறிகள் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் விளையும் ஊட்டி மலைப்பூண்டு மருத்துவ குணம் கொண்டதால் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரடப்பட்ட மலைப்பூண்டு அறுவடை செய்து லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம் விற்பனை மண்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மலைப்பூண்டின் விலை 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததால் மலைப்பூண்டு குறைந்த அளவே பயிரடப்பட்டது.
இதனால் வரத்து குறைவின் காரணமாக பூண்டின் விலை சில நாட்களாக கிலோ ஒன்றிற்கு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உதகை அருகே உள்ள தேனாடுகம்பை பகுதியில் மலைப்பூண்டு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
–அனகா காளமேகன்







