பூனை வடிவில் தோசை சுட்ட சமையல் கலைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.
இட்லி, தோசை இந்தியாவில் தவிர்க்க முடியாத உணவாகும். தள்ளுவண்டி முதல் 5 ஸ்டார் உணவகம் வரை இவை கிடைக்காத இடங்களே இல்லை. வெளிநாடுகளிலும் தோசை விரும்பிகள் அதிகம் உள்ளனர். காலத்துக்கு ஏற்றவாறு பல்வேறு வகையில் சுவையிலும், தோற்றத்திலும் தோசைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சிலர் தோசையில் தங்கள் கலைநயத்தை காட்டி வருகின்றனர். சமூகவலைதளங்களில் இந்த வித்தியாசமான தோசைகளை உருவாக்கும் வீடியோக்கள் பயங்கர வைரலாகும்.
அப்படித்தான் நாண்டி பவுண்டேசன் சிஇஓ மனோஜ்குமார் ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். 2 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் தள்ளுவண்டி சமையல் கலைஞர் ஒருவர் தோசை சுடுகிறார். தோசைக் கல்லில் வெண்ணெய் உதவியுடன் ஒரு விலங்கை வடிவமைக்க முயற்சிக்கிறார். சிறிது நேரத்திலேயே அழகிய பூனை வடிவில் தோசை உருவானது.
இதையும் படிக்க: ”ஏலே அது பித்தளை..ஏலே அது பித்தளை”- பாட்டியின் கூச்சலால் விரக்தியில் தப்பியோடிய திருடன்
அந்தப் பதிவில், “இந்தியாவில் உள்ள சாலையோர உணவு வியாபாரிகள் மிகவும் புதுமையான, தாக்கத்தை ஏற்படுத்தும் உணவை தயாரிப்பவர்கள். சுத்தமான உணவை உற்பத்தி செய்வதற்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த இளைஞனின் கலைத்திறனை பாராட்டவும்.” என்று மனோஜ்குமார் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சுமார் 4 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. பலரும் அவரின் திறமையை பாராட்டியும் வருகின்றனர்.
-ம.பவித்ரா








