சாதியவாத, மதவாத சக்திகளான பாமக மற்றும் பாஜக உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு போதும் கூட்டணியில் இருக்காது என்ற கொள்கை முடிவில் பயணித்து வருவதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு அக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வருகை தந்தார். முன்னதாக தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் திமுக முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விசிக எப்போதும் உறுதுணையாக இருக்கும் .திமுக தலைவரின் பிறந்தநாள் கூட்டம் என்பது ஒரு கொள்கை பிரகடனம். இந்த நேரத்தில் மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடபோவதாக அறிவித்திருப்பது என்பது வேதனை அளிக்கிறது. ஆகவே திமுக தலைவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துவதாக கூறினார். மேலும் பாஜக எதிர்ப்பு அணியினர் ஓர் அணியாக திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து தொடர்ந்து பேசிய திருமாவளவன் திமுகவிற்கும், விசிகவிற்கும் இடையே முரண்பாடுகளை, விரிசல்களை ஏற்படுத்த வேண்டும் என சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதற்கு ஒருபோதும் வாய்ப்பே இல்லை. அதுபோன்ற எண்ணங்களை எதிர்பார்த்து காத்திருபப்வர்கள் ஏமாந்து தான் போவார்கள் என தெரிவித்தார்.
பின்னர் , பாமக குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாமகவின் கலாச்சாரம் என்பது ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு, தேர்தல் நெருங்கி வரும் ஓரிரு ஆண்டுகளில் எந்தக் கூட்டணியில் இருக்கிறார்களோ அந்த கூட்டணியில் இருந்து மெல்ல விலகி, வேறொரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். ஒரே அணியில் இருந்தால் வேற வலிமையை கூட்ட முடியாது என்பதை கட்சி நிர்வாகிகளுக்கு உணர்த்தவே இது போன்ற செயலில் பாமகவின் இரு தலைவர்களும் செயல்பட்டு வருகிறார்கள் என்று விமர்சித்த அவர், கட்சியை வலுப்படுத்துவதற்காகவே இதுபோன்ற சூழ்ச்சிகளையும், உத்திகளையும் பாமக கையாள்கிறது. திமுகவுடன் பேசிக்கொண்டே, அதிமுகவின் பேரத்தை உயர்த்துவதும், அதிமுகவுடன் பேசிக்கொண்டே திமுகவிடம் பேரத்தை உயர்த்துவதும் பாமகவின் தேர்தல் தந்திரம் என்றும் கூறினார்.
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வரும் கருத்துகளுக்கு மறைமுகமாக பதிலளித்த அவர், திமுக – விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே எந்த சக்தியாலும் பிளவை ஏற்படுத்த முடியாது. மேற்கு மாவட்டம் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும், திமுகவிற்கு சாதகமாக இருக்காது என பலர் ஆரூடம் கூறிய நிலையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் கிடைத்திருக்கும் வெற்றி அனைத்தையும் பொய்யாக்கியிருக்கிறது. குறிப்பாக ஆளும் கட்சி கூட்டணி மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டதன் வெளிப்பாடே இந்த வெற்றியை மக்கள் வழங்கி இருக்கிறார்கள் என்றும் பேசினார்.
இதனை தொடர்ந்து சாதியவாத, மதவாத சக்திகளான பாமக மற்றும் பாஜக உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் கூட்டணியில் இருக்காது என்ற கொள்கை முடிவில் பயணித்து வருவதாகவும், ஆனால் பலர் வியூகங்களின் அடிப்படையில் பேசி வருகிறார்கள் என்றும், பாமக-பாஜக ஆகிய இருவரும் கட்சி ஆதாயத்திற்காக மக்கள் உணர்வுகளை தூண்டுகிறார்கள் என்றும், மக்களிடம் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மோதல்களை உருவாக்குகின்ற கட்சிதான் பாமக – பாஜக எனவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா










