பங்கு சந்தையில் முதலீடு செய்த பணம் ரூ.37 லட்சம் மோசடி தொடர்பாக, ஆதம்பாக்கம் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மேனேஜராக பணியாற்றி வருபவர் 58 வயதான சீதாராமன். இவர், கடந்த 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை திருநெல்வேலி மாவட்டம் அழகுநேரி தச்சநல்லூரில் பசை தயாரிக்கும் கம்பெனியை தனது நண்பர் 50 வயதான நெல்லையப்பன் என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு சீதாராமன், கம்பெனியில் இருந்து பிரிந்து சென்று தனியாக ஆன்லைன் ஷேர் மார்க்கெட் ஏஜென்சி நடத்தி வந்தார். 
இந்த நிறுவனத்தில் நெல்லையப்பன் 7 லட்சம் ரூபாயும், அவரது மாப்பிள்ளை கணேஷ் (எ) ராம் குருநாதன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து 20 லட்சம் ரூபாயும் முதலீடு செய்துள்ளனர். இதில், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு லாப பணத்துடன் சேர்த்து 37 லட்சம் ரூபாயை சீத்தாராமன் திருப்பிக் கொடுக்க வேண்டியது இருந்துள்ளது.
இந்நிலையில், திடீரென பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் 37 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்க முடியாமல் சீத்தாராமன் தவித்துள்ளார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சீதாராமன், ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மகனை சந்திக்க வந்துள்ளார். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றது. பின்னர் அவரை மிரட்டி ஒரு வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, நங்கநல்லூர் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோயில் பகுதியில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
பின்னர் இது குறித்து சீதாராமன் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில், ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் பிராங்க்ளின் டி.ரூபன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.இதில் சீதாராமன் நடத்திய ஆன்லைன் ஷெர்மார்கெட் நிறுவனத்தில் முதலீடு செய்த கணேசன் என்ற ராமகுருநாதன், அவரது நண்பர்களான வழக்கறிஞர் தங்கராஜ், பிரபா, கார் டிரைவர் சதீஷ் உள்பட 5 பேர் சேர்ந்து கடத்தியது தெரியவந்தது.
பின்னர் அந்த கும்பல் கொடுத்த பணத்துக்கு ஆதாரம் இல்லாததால் அந்த பணத்தை திரும்ப பெறுவதற்காக சீத்தாராமனை கடத்திச்சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கணேஷ் என்கிற ராமகுருநாதன், டிரைவர் சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.








