பறவைக் காய்ச்சல் எதிரொலி – கேரளாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பஞ்சாயத்துகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கோழி, வாத்து போன்றவை இறைச்சி மற்றும் முட்டைக்காக பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் உயிரிழந்ததால் இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் எச்-1, என்-1 பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பஞ்சாயத்துகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் பரவியதாக உறுதிப்படுத்தப்பட்ட இடத்திலிருந்து 10 கி.மீ சுற்றளவில் வாத்துகள், கோழிகள், காடைகள் மற்றும் பிற வீட்டுப் பறவைகளின் முட்டைகள், இறைச்சி விற்பனை செய்ய ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 19000 பறவை இனங்களுக்கு நோய் தொற்று பாதித்த நிலையில் இதுவரை 4,240 பறவை இனங்கள் அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் பறவை இனங்கள் அழிக்கும் பணி துவங்க உள்ள நிலையில் முட்டை, இறைச்சி விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார். பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.