”கொள்கை உறுதியுடன் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் ஒரு பாடமாக இருக்கிறார்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாரில் உள்ள முத்தமிழ் பேரவையில் திமுக மகளிர் அணி சார்பில் சத்தியவாணிமுத்து அம்மையார் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து சத்தியவாணி முத்து அம்மையார் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதாவது..
” திமுகவின் பெண் சிங்கமாக வாழ்ந்து காட்டியவர் சத்தியவாணி முத்து அம்மையார். திமுகவை தொடங்கிய நேரத்தில், மகளிர் அமைப்பை உருவாக்கிய காலத்தில் பலருக்கு பேச தெரியவில்லை. அடிமை விலங்கை உடைக்க முடியாத காலம் அது.
பேரறிஞர் அண்ணாவையே தன்னுடைய பேச்சால் அசத்திகாட்டியவர் சத்தியவாணி முத்து அம்மையார். அந்த காலத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் பெண்கள் திராவிட அரசியலுக்கு வந்தார்கள். அப்போதே இளம் வயதிலேயே அரசியலில் இணைந்து தொண்டாற்றியர் சத்தியவாணி முத்து என பெரியாரே பேசி இருக்கிறார்.
இதனையும் படிக்க: காயமடைந்த மிளா குட்டி : சிகிச்சை அளித்து காட்டில் விட்ட தமிழ்நாடு வனத்துறை
கலைஞர் உடன் சத்தியவாணி முத்துவிற்கு கொள்கை உறுதி கொண்ட நட்பு இருந்தது. அரசியலுக்கு வரும் பெண்களுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் ஒரு பாடம். “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
– யாழன்







