ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை

ஸ்டெர்லைட் வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து, மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர்…

ஸ்டெர்லைட் வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து, மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தின் நூறாவது நாளான மே 22, 2018 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 101 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருவதோடு, ஸ்டெர்லைட்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் பொது வெளியில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு வீரபாண்டியூரம், காயலூரணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 10 பேர் டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தின் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என பதாகைகளை ஏந்தி அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், 2018 சமயத்தில் பரப்பப்பட்ட பல்வேறு வதந்திகள் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனால் தூத்துக்குடி பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தாமிர உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது எனவும்,  ஆலை மூடப்பட்டதால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ லட்சத்துக்கும் மேலான மக்கள்
அவதிப்படுவதாகவும் கூறினர்.

குறிப்பாக, கொரோனா தொற்றுநோய் காலத்தில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்காக
இயக்கப்பட்ட ஆலையில் மீண்டும் தாமிர உற்பத்தி தொடங்கப்பட வேண்டும் என்பதே
தங்களின் கோரிக்கை என தெரிவித்த அவர்கள், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு, ஸ்டெர்லைட் ஆலையைச் சார்ந்துள்ள, அதனுடன் தொடர்புடைய சிமெண்ட் தொழிற்சாலைகளின் மூலப்பொருட்கள், கொள்முதல் செய்வதில் தொடர்ந்து பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், எனவே, இதற்குமேல் கால தாமதம் செய்யாமல் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் வழக்கை விரைவாக விசாரித்து ஆலை இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் தென் தமிழகத்துக்கு வந்தால் தான் மக்களின் வாழ்வு முன்னேறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.