ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையால், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவரை தகுதி நீக்கம் செய்ய முடியுமா? சட்ட பிரிவு 102 என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ”அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று பேசியதாக தெரிகிறது.
அதனடிப்படையில் , பாஜக எம்எல்ஏ-வும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல்காந்தி ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் இழிவுபடுத்தி விட்டதாக கூறி குஜராத் மாநிலம், சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி எனவும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்குவதாகவும் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இன்று, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் அறிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையால், கேரளாவின் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது பதவி பறிபோகுமா என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று இந்த தகுதி நீக்கம் நடந்துள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. சட்டம் என்ன சொல்கிறது என்பதனை பார்க்கலாம்.
ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட எம்.பி ஒருவரை தகுதி நீக்கம் செய்வது இரண்டு அல்லது மூன்று சூழ்நிலைகளில் நடைபெறலாம்.
1. 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின் படி 8(1) இல் அவர் தண்டனை பெற்றிருந்தால் பதவி பறிக்கப்படும்.
2. குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் குற்றங்கள் போன்ற பிரிவுகளில் 102(1), 191(1) தண்டனை பெற்றிருந்தால் பதவி பறிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால் , அவதூறு வழக்குகளுக்கெல்லாம் பதவி பறிக்கப்படுவது வராது.
3. அரசியலமைப்பின் 10-வது அட்டவணையில் இடம்பெற்றிருக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையின்றி கட்சித் தாவினால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் சட்டமியற்றுபவர் வேறு ஏதேனும் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டாலோ அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலோ மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் RPA பிரிவு 8(3) ன் படி தகுதி நீக்கம் செய்யப்படலாம். அரசியலை குற்றமாக்குவதை தடுப்பது மற்றும் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர்களை தேர்தலில் நிற்க விடாமல் தடுப்பது போன்ற நோக்கங்களுக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இதேபோல், இந்தியாவில் இதுவரை நீதிமன்ற தீர்ப்பால் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்பபை சூரத் நீதிமன்றம், 30 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளது. ஒருவேளை ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, தண்டனைக்கு தடை விதிக்கும் பட்சத்தில் ராகுல் காந்தியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள எம்.பி பதவி மீண்டும் திருப்பி வழங்கப்படலாம்.
ஏனென்றால் 2018-ஆம் ஆண்டு ‘பிரஹாரி எதிர் யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அந்த நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்கள் கடந்த பிறகே, தகுதி நீக்கம் நடைமுறைக்கு வரும் என்று பிரிவு 8(4) கூறுகிறது.
அந்த கால அவகாசத்திற்குள் தண்டனை பெற்றவர்கள், உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, மேல்முறையீடு செய்யலாம். ஆனால் அந்த சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.
- பி.ஜேம்ஸ் லிசா









