ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
மல்லிகார்ஜூன கார்கே
இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மக்களவையில் ராகுல்காந்தியின் தகுதி நீக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய பாஜக அனைத்து வழிகளையும் மேற்கொண்டது. உண்மையை பேசுபவர்களை வைத்திருக்க அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. உண்மை பேசுபவர்களை பாஜக வைத்திருப்பதில்லை. காங்கிரஸ் தொடர்ந்து உண்மையையே பேசும் என கூறினார்.
மம்தா பானர்ஜி
ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது குறித்து மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரி0வத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளனர். குற்ற பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுக்காக தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் ஒரு புதிய வீழ்ச்சியை நாம் கண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறுகையில், ராகுல்காந்தி மக்களவை வரக்கூடாது, அவரது குரல் ஒலிக்கக்கூடாது என்று பாஜக இப்படி செய்து உள்ளது. இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. மக்கள் மன்றத்தில் இதனை நாங்கள் எடுத்து செல்வோம் என கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் , ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய நடவடிக்கைகள் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை தடுக்காது என குறிப்பிட்டுள்ளார்.









