கச்சத்தீவை மீட்பதே தமிழ்நாடு மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என ராமாநாபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் சார்பில் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர் பட்சா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்திய அளவில் மீன்பிடி தொழிலில் 5-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திரமோடி நிறைவேற்றவில்லை; மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண பாஜக அரசு என்ன செய்துள்ளது? பாஜக ஆட்சிக்கு வந்த பின் மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது; 9 ஆண்டுகளில் 619 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பாஜக அரசே பொறுப்பு.
கச்சத்தீவை தாரை வார்த்தற்கு திமுக அரசு காரணம் என கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கூடாது என இந்திராகாந்தியிடம் அப்போதைய முன்னாள் முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று வலியுறுத்தினர். தொடர்ந்து கச்சத்தீவு இந்தியாவுக்கு குறிப்பாக ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது என்ற ஆதாரத்தை திரட்டிய கருணாநிதி இந்திய அரசிடம் வழங்கினர்.
இந்திய அரசு இலங்கை அரசுடன் போடப்பட்ட ஒப்பந்ததை ரத்து செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் வரும் நாடாளுமன்ற மன்ற தேர்தலில் அமைய உள்ள புதிய கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்கும். கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளியாக அமையும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மீனவர்களுக்கான புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- மேலும் 5035 மீனவர்களுக்கு பட்டா வழங்கப்படும்
- 45,000 மீனவர்களுக்கு மீன்பிடி கூட்டுறவு மூலம் கடன் வழங்கப்படும்
- மீன்பிடி தடை கால நிவாரண தொகை ரூ.8,000 ஆக உயர்வு
- 60 வயதான மீனவர்களுக்கு மீன்பிடி நிவாரண தொகை வழங்கப்படும்
- நாட்டுப் படகுகள் வாங்க 1000 மீனவர்களுக்கு 40% மானியம் வழங்கப்படும்
- நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 3,400 லிட்டரிலிருந்து 3,700 லிட்டராக உயர்வு
- விசைப் படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் 18,000 லிட்டரில் இருந்து 19,000 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது
- நாட்டுப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய மண்ணெண்ணெய் 4,000-ல் இருந்து 4400 லிட்டராக உயர்வு
- தங்கச்சிமடத்தில் மீன் பிடிதுறைமுகம் அமைக்கப்படும்
- பாம்பனில் மீன் பிடி தூண்டில் வளைவு அமைக்கப்படும்
- மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கப்படும்
- புதிய திட்டங்களுக்காக ரூ.926 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
முன்னதாக ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.








