நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க கோரி அப்பகுதியில் வசிக்கும் லீலா மற்றும் அவரது குடும்பத்தினர் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த லீலா . நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தாங்கள் பள்ளிபாளையம் நகராட்சி ஆவரங்காடு பகுதியில் காவிரி கரையோர பகுதியில் வசித்து வருவதாகவும், இப்பகுதியில் சட்ட விரோதமாக வீடுகளிலேயே 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையம், மற்றும் காவல் துறை கட்டுப்பாட்டு அறை 100, முதலமைச்சர் தனிப்பிரிவு 1100 உள்ளிட்ட இடங்களுக்கு புகார் அளித்த நிலையில், சில நாட்கள் மது விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்து மது விற்பனை நடைபெற்று வருகிறது.
புகார் அளித்ததை அறிந்த மது விற்பவர்கள் தனது இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதோடு, தனது வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சட்டவிரோத மது விற்பனையை தடுத்து நிறுத்தி, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தங்களது பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்திருந்தனர்.
—சௌம்யா.மோ






