காளிமார்க் – கெம்பகோலா கூட்டு : கோக், பெப்ஸிக்கு பாதிப்பா..?

தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு பெப்சி, கொக்கொ கோலாவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது, ரிலையன்ஸின் கெம்பகோலா அது குறித்து செய்தி தொகுப்பை பார்க்கலாம். இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் மிகப்பெரிய…

தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு பெப்சி, கொக்கொ கோலாவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது, ரிலையன்ஸின் கெம்பகோலா அது குறித்து செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமம் பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல், ஜவுளி, தகவல் தொலை தொடர்பு என பல்வேறு தொழில்களில் கொடிகட்டி பறக்கிறது.

தற்போது கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் எனப்படும் நுகர்வோர் உபயோகப்பிரிவில் களமிறங்கி அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக நுகர்வோர் பிரிவில் செயல்பட்டு வரும் நிறுவனங்களை கையகப்படுத்துதல், பங்குகளை வாங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

குளிர்பான சந்தையை பொறுத்தவரை , தமிழ்நாட்டில் காளிமார்க், மாப்பிள்ளை விநாயகர், லவ் ஓ, வடமாநிலங்களில் கேம்பா என மண்டல வாரியாக உள்நாட்டு குளிர்பானங்கள் இந்திய சந்தையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகின்றன. 1991-ல் இந்திய அரசு தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளை அமல்படுத்தியது.

அதனால் பகாசூர வெளிநாட்டு நிறுவனங்களான பெப்சியும், கோகோ கோலாவும் மீண்டும் இந்திய சந்தையில் நுழைந்தன. ஆரம்பத்தில், அளவு கடந்த இலவசங்களை அள்ளி தெளித்தது. அதற்கு அரசின் ஆதரவு கிடைத்தது. இன்றும் அது தொடர்கிறது. தந்திரமாக உள்நாட்டு குளிர்பான நிறுவனங்களை நசுக்கியது பெப்சியும், கோலாவும். ஆனாலும், காளிமார்க், கெம்பா, லவ் ஓ போன்ற சில நிறுவனங்கள் எதிர் நீச்சல் போட்டு இன்றும் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வடஇந்தியாவில் பிரபலமாக உள்ள கெம்பா நிறுவனத்தை கையகப்படுத்திய ரிலையன்ஸ், கெம்பா கோலா என அறிமுகம் செய்தது. அதிரடியாக பெப்சி, கோகோ கோலா வை விட 35 சதவீதம் விலையை குறைத்தது. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு மக்களின் ஆதரவை பெற்றது ரிலையன்சின் கெம்பா கோலா. 125 ஆண்டுகளாக, குளிர்பான சந்தையின் உலக தலைவனாக வந்த கோலாவும், பெப்சியும், ரிலையன்சின் போட்டியை சமாளிக்க, வழி தெரியாமல் , விழி பிதுங்கி நிற்கின்றன.


தற்போது காளிமார்க்-ரிலையன்ஸ் இடையே பரஸ்பரம் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் உற்பத்தி மற்றும் விநியோக வலை அமைப்பில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் . அதன்படி இனி காளிமார்க் குளீர்பானங்களை கெம்ப கோலாவும்,கெம்ப கோலா தயாரிப்புகளை காளிமார்க்கும் சந்தைப்படுத்தும்

இனி ரிலையன்ஸ் ஸ்டோர்களில் காளீமார்க் கின் – பொவொண்டோ, கிளப் சோடா, ஜின்ஜர்,பன்னீர், இளநீர்,ஆரஞ்சு என பல ரகங்கள் கிடைக்கும். மறுபுறம் தென் இந்தியாவில் காளிமார்க்கின் எட்டு உற்பத்தி நிலையங்களும் ரிலையன்சுக்கு உதவும். இந்த வர்த்தக கூட்டுறவால் காளிமார்க்கும், கெம்ப கோலாவும், கொக்க கோலாவையும், பெப்சியையும் விற்பனையில் பின்னுக்கு தள்ளி, வர்த்தகத்தில் வெற்றிக்கொடி கட்டும் என நம்புகிறது. என்ன நடக்கும் பார்க்கலாம்

 

-ரா.தங்கபாண்டியன்,நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.