தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயில், சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதிகள் என்று 9 திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அதில் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலாகும். நவ திருப்பதிகளில் முதல் தலமாகவும், நவகோள்களில் சூாிய அம்சமாகவும் விளங்குகின்றது. மூலவா் ஸ்ரீவைகுண்ட நாதன் என்றும் உற்சவா் கள்ளபிரானாக அருள்பாலிக்கும் இத்திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த வருடத்திற்கான சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கிய நிலையில், கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று திருக்கோவிலில் திருமுளைச்சாற்று இரவில் சேனை முதலியாா் புறப்பாடு நடைபெற்றது.
இத்திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. அதனைதொடா்ந்து காலை 7.30 மணிக்கு உற்சவா் சோரநாதா் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் கொடிமரம் அருகில் எழுந்தருளினாா்.







