அரசின் திட்டங்கள் முறையாக மக்களிடம் சென்று சேருகிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் முத்திரைப் பதிக்கும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பொருளாதார மேம்பாடு, வேளாண்மை, நீர்வள ஆதாரங்கள், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, ஊரக உட்கட்டமைப்பு, சமூகநீதி உள்ளிட்டவற்றில் வளர்ச்சியினை விரைவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது..
”அரசு என்பது முதலமைச்சர் மட்டுமல்ல. அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் என மூன்று பிரிவினரால் ஒருமுகப்படுத்தப்பட்டு செயல்படுவதே நல்லாட்சியாகும். கடந்த பத்தாண்டு காலத்தில் ஒரு தொய்வு இருந்தது. ஆனால் தற்போதைய இந்த காலகட்டம் எனக்கு மன நிறைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவித்துக் கொள்கிறேன். இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
20 மாத காலத்தில் புதிய புதிய திட்டங்களை அறிவித்தது சாதனை அல்ல. அறிவிப்புகளை செயல்படுத்துவதை கண்காணிப்பதில் தான் முக்கிய வெற்றி உள்ளது. அரசின் திட்டங்களில் சுணக்கமோ, முடக்கமோ இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். திட்டங்களில் ஏதேனும் தடங்கல் இருக்கலாம், உத்தரவு வர வேண்டியதாக இருக்கலாம் எதுவாக இருப்பினும் அதிகாரிகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்தி செயல்படுத்த வேண்டும்.
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உள்ளிட்ட திட்டங்களால் மக்கள் இந்த அரசை பாராட்டி வருகின்றனர். 8 கோடி மக்களும் பாராட்டும் அரசாக நாம் மாற வேண்டும்.
மதுரையில் கலைஞர் நூலகம் மள மளவென எழுந்து வருகிறது. அதேபோல கிண்டியில் அரசு மருத்துவமனைக்கான பணிகளும் வெகு விரைவாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு திட்டங்களையும், அறிவிப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் தடைகள் ஏற்படலாம். 2023 ஆம் ஆண்டுக்குள் அனைத்துத் திட்டங்களும் நடைமுறைக்கு வந்துவிட்டது என்ற நிலை ஏற்பட வேண்டும். திட்டங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தாலே அந்தத் திட்டம் வெற்றி பெற்றுவிடும். அதனால் நாம் சேர்ந்து செயல்படுவோம், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
– யாழன்







